சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (31). சென்னை இராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி இரவு சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். இதையடுத்து கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்த அவர், தாம்பரம் மார்க்கமாக செல்வதற்காக நடைமேடையில் இறங்கிக் கொண்டுந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த இருவர், மோகன்ராஜ் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மோகன்ராஜ், மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாம்பலம் ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சரண்ராஜ் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த விக்ரம் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 சவரன் செயினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.