செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காமராஜ் தெரு பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அன்வர் உசேன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சாஹின் இஸ்லாம் என்பவரை தற்போது கைது செய்து அவரிடம் இருந்து எட்டு கிராம் கொண்ட ஹெராயின் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கடந்த மாதம் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் போதைப் பொருளை வாங்கி வந்து, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனிப்படை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஐசக் ராபர்ட் மற்றும் கொளத்தூர் பகுதியைச்; சேர்ந்த கல்லூரி மாணவர் ரித்தீஷ் ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரண் என்பவரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.