நண்பர் கைது pt desk
குற்றம்

சென்னை | பெண்ணின் புகைப்படத்தை சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கணவரின் நண்பர் கைது

பெண்ணின் புகைப்படத்தை சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கணவரின் நண்பரே இத்தகைய செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை, கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து 2 பெண் குழந்தைகளுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அந்தப் பெண் மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், யாரோ ஒருவர், தனது புகைப்படத்தையும், தனது தங்கை மற்றும் தாயாரின் புகைப்படத்தையும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான கணக்குகளை உருவாக்கி, மணமகன் தேவை என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

cyber crime

இது குறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செம்பியம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (34) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புகாரளித்த பெண்ணின் கணவருடடைய நண்பர் என்பது தெரியவந்தது.

தோடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தப் பெண் அவரது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது, இரு குடும்பத்தாரும் நன்கு பழகி வந்த நிலையில், பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரிந்து, நீ தன்னிடம் மட்டும்தான் பேச வேண்டும், வேறு யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டி வந்ததும் அதனால், அப்பெண் அவரிடம் பேசாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

arrest

இதையடுத்து அந்தப் பெண்ணை பழி வாங்குவதற்காக அவரது புகைப்படங்களை சித்தரித்து சமூக வலைளதத்தில் வினோத்குமார் பதிவிட்டும், உறவினருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட வினோத்குமாரை சிறையில் அடைத்தனர்.