பணிப்பெண் கைது pt desk
குற்றம்

சென்னை: வீட்டில் வைத்திருந்த நகைகள் மாயம் - விசாரணையில் சிக்கிய பணிப்பெண்!

அண்ணா நகரில் வீட்டில் வைத்திருந்த நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக பணிப்பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

ஜெ.அன்பரசன்

அண்ணா நகர் கிரெசன்ட் சாலை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் நீராஜா (31). இவர் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நவம்பர் 22-ம் தேதி தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது அதில் சில தங்க நகை காணமால் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீராஜா, தங்க நகைகள் மாயமானது குறித்து அண்ணா நகர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

arrested

புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சி.சி.டிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் நீராஜா வீட்டின் பீரோ லாக்கர் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மாயமானது எப்படி என்றும் அவரது வீட்டுக்கு யார் யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நீராஜா வீட்டில் வேலை செய்து வந்த பவானி (எ) லட்சுமி பவானி (30) மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், நீராஜா வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பவானி வேலை செய்து வருவதாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகைகளை திருடியாதாகவும் ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை அவரது கணவர் துர்கா பிரசாத் (38) இடம் கொடுத்ததாகவும் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இவரிடமிருந்து 13.700 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து பவானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து துர்கா பிரசாத்தை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.