தூத்துக்குடி: மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய தலைமுறையின் ‘வெற்றிப்படிகள்’ நிகழ்ச்சி
பன்னிரண்டாம் மாணாக்கர்கள் நம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் வகையில், அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக தூத்துக்குடியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் 2024 நிகழ்ச்சியில் 1,350 க்கும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணாக்கர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ளவும் அதிக மதிப்பெண்களை பெறவும் ஆலோசனை தரும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படிகள் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது புதிய தலைமுறை.
இந்த வகையில் SRM வேளாண் அறிவியல் கல்லூரியும், புதிய தலைமுறையும் இணைந்து தூத்துக்குடி சுப்பைய்யா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை நடத்தியது. தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் ரேவதி சுப்புலட்சுமி, சுப்பைய்யா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி கவுசல், SRM வேளாண் அறிவியல் கல்லூரியின் துணை பேராசிரியர் சஞ்சீவ் காந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு +2 தேர்வை எளிதாக கையாண்டு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து நம்பிக்கையை உரையாற்றினார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.