செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ்குமார். இவரை தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று மும்பை போலீஸ் எனக் கூறி, நீங்கள் அனுப்பிய பார்சல் ஒன்றில் போதைப்பொருள் இருக்கிறது. அதனால் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாக மோசடி செய்து அவரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு இணைப்பை துண்டித்து விட்டனர்.
பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் தாம்பரம் மாநகர காவல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சசிகுமார் அவர்கள் தொடர்பு கொண்டார். இதையடுத்து செல்போன் எண், வீடியோ கால் வழியாக பேசிய தகவல்களை சேகரித்து ஐபி முகவரி உள்ளிட்ட விவரங்களோடு தேடி 7 பேரை கைது செய்தனர்.
இந்த கும்பல் இதே போல் பள்ளிக்கரணையில் சரத் என்பவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்து லாபம் வருவது போல் உருவாக்கி அந்த பணத்தை எடுக்க முடியாதவாறு செய்துள்ளனர். அதற்கு வரி செலுத்தினால் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி 1,97,264 ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இந்த இரு வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை தாம்பரம் மாநகர காவல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 47 ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது, மோசடி செய்து வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி பல பேருக்கு அனுப்பி வைப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 15 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட சுரேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில், இவர்கள் இதுவரை 82 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர். கேரளாவில் ஹோட்டல் நடத்தும் தொழிலதிபரிடம் 29,91,000 ரூபாய் பணத்தை ஏமாற்றிய வழக்கில் ஏற்கனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.