செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை,GKM காலனி பகுதியில் வசித்து வரும் வினோதினி என்பவர் பியூட்டிஷனாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது, அங்குள்ள அறை எண். 304ல் தங்க வைக்கப்பட்டிருந்த அவர், அறையை பூட்டிவிட்டு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.
சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையின் வெளியே 2 நபர்கள் நின்றிருந்த நிலையில்,, ஒரு நபர் தான் பூட்டியிருந்த அறையை திறந்து உள்ளே நுழைந்து எதையோ தேடிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்சியடைந்த அவர், பெண் வீட்டாரை அழைத்து, 3 நபர்களையும் பிடித்து விசாரணை செய்தபோது, 3 நபர்களும் அறையில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.
இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுதிர் குமார் (33), சூரஜ் (28), பத்ரி விஷால் (19) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், மூவரும் அதே திருமண மண்டபத்தில் தூய்மை பணி செய்து வருவதும், மூவரும் திருமண மண்டபத்தின் அறையின் மாற்று சாவி போட்டு வைத்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.
திருமண வீட்டார் அறையை பூட்டி சென்றதை நோட்டமிட்டு, மாற்று சாவி கொண்டு அறையின் கதவை திறந்து தங்க நகைகளை திருட முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் ராயப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.