நகை திருடு போன வழக்கு - 5 பெண்கள் கைது pt desk
குற்றம்

சென்னை | பூட்டியிருந்த வீட்டில் 20 சவரன் நகை திருடு போன வழக்கு - 5 பெண்கள் கைது

காரப்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 20 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் 5 பெண்கள் கைது. 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை காரப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு (33), இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 7ம் தேதி சொந்த ஊர் சென்று விட்டனர். இதையடுத்து 10ம் தேதி காலை டில்லிபாபு வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள ஷூவில் வைத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து ஊருக்குத் திரும்பிய மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து பூட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது டேபிள் மீது நகை வைக்கும் பெட்டி இருந்தது கண்டு அதிpர்ச்சியடைந்த அவர், பீரோவில் பார்த்த போது அதில் இருந்த 20 சவரன் நகைகள் மாயமாகியுள்ளதை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் நிகழ்விடம் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 5 பெண்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எழில் நகரைச் சேர்ந்த சுமதி (18), மீனா (30), ரம்யா (21), கஸ்தூரி (23), கலைவாணி (25), என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து போலீசார் 5 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.