கொலை x page
குற்றம்

சென்னை | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை.. இளம்பெண்ணின் உடலை மீட்ட காவல்துறை!

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கவுரவ் குமார் மற்றும் அவரது 2 வயது மகனின் உடல் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், இன்று அவரது மனைவியின் உடலும் பெருங்குடி குப்பைக்கிடங்கில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

PT WEB

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி வீசிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது, 2 வயது மகன் ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதையடுத்து, இன்று அவரது மனைவியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை அடையாரில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே, கடந்த ஜனவரி 26ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வடிவதாக வந்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து நடந்த காவல்துறையின் விசாரணையில், தரமணி பாலிடெக் கல்லூரியில் பாதுகாவலர் வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் மூலம், கவுரவ் குமாரின் நண்பர் சத்யேந்தர் உட்பட 2 பேரை கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடிபோதையில் கவுரவ் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றப்போது ஏற்பட்ட தகராறில் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் அவரது 2 வயது மகன் ஆகியோரை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசியது தெரியவந்தது. அதேசமயத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும், மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர், லலித், விகாஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், பீகார் இளைஞர் கவுரவ் குமார் உடல் கிடைத்ததையடுத்து மற்ற இருவரின் உடலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி அடையாறு மத்திய கைலாஷ் கால்வாய்ப் பகுதியில் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இளம்பெண்ணின் உடல் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினர் தேடி வந்தனர் . இந்நிலையில்தான், 3 நாட்களுக்குப் பிறகு பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து அப்பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு, உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட 3 பேர்

இந்நிலையில், இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தாலும், கண்டெடுக்கட்ட இளம்பெண்ணின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? எந்த வகையில் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காலல்துறையினர் தெரிவித்துள்ளனர்.