சென்னை | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை.. இருவரின் உடல் கண்டெடுப்பு.. 7 பேர் கைது!
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26 ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் கொலையுண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன்படி, சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் அவர், தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட பிகாரைச் சார்ந்த 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொலை செய்து விட்டதாகவும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுற்படும் போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண், அவரது கணவர் கவுரவ் குமார் மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து, இருவரின் உடலை காவல்துறையினர் அடையாறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், இன்று மதியம் மத்திய கைலாஷ் கால்வாய் பகுதியில் கொலை செய்யப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிகாரிலிருந்து வேலைகாக சென்னை வந்து தங்கியிருந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

