ஏடிஎம் வேன்
ஏடிஎம் வேன் கூகுள்
குற்றம்

ரூ.2 கோடி பணத்துடன் நின்ற ஏடிஎம் வேன் கடத்தல்.. சினிமா பாணியில் நடந்த சம்பவம்

Jayashree A

குஜராத்தில் சினிமா பட பாணிபோல் 2 கோடி ரூபாயுடன் நின்றுகொண்டிருந்த வேனை கள்ளச்சாவி போட்டு ஓட்டிச் சென்ற கொள்ளையன்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள காந்திதாமில் என்ற இடத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மில் பணத்தை நிரப்புவதற்காக, வேன் ஒன்றில், 2 கோடி ரூபாய் அடங்கிய பணப்பெட்டியுடன், காவலாளிகளின் உதவியில் தனியார் வங்கி ஊழியர்கள் வந்து இறங்கியுள்ளனர்.

அனைவரும் சோர்வாக இருந்ததால், சரி ஒரு கப் டீயை சாப்பிட்டு வேலையைத் தொடங்கலாம் என்று நினைத்தவர்கள் வேனை வங்கியின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, வேன் டிரைவர் உட்பட அனைவரும் அருகில் இருந்த டீக் கடையில் டீ குடித்துள்ளனர். அந்தசமயம் எங்கிருந்தோ கையில் கள்ளச்சாவியுடன் வந்த ஒரு நபர் அசால்டாக வங்கியின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த வேனை இவர்களின் கண் முன்னே கடத்திச் சென்று இருக்கிறார்.

டிரைவர் இங்கிருக்க, யார் வேனை எடுத்துக்கொண்டு செல்கிறார் என்று ஒரு கணம் யோசித்தவர்கள் பிறகு சுதாரித்துக்கொண்டு, திருடன்.. திருடன்.. என்று கூப்பாடு போட்டுள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர் வேனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அச்சமயம் அருகில் டீக் குடித்துக்கொண்டிருந்த இருவரின் டூவீலரை உதவிக்காக பெற்றுக்கொண்ட வங்கி ஊழியர், கடத்திக்கொண்டு சென்ற வேனை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதற்குள் வேன் கடத்தப்பட்ட செய்தியை போலீசாருக்கு சொல்லவே, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஜீப்பில் விரைந்துள்ளனர்.

வேனை துரத்திக்கொண்டு டூவீலரில் சென்ற வங்கி ஊழியர்கள், கடத்தப்பட்ட வேனுக்குப் பின்னால் ஒரு கார் ஒன்று செல்வதைக் கவனித்தனர். இருப்பினும் அவர்களால் வேனையோ காரையோ நெருங்க முடியவில்லை. இச்சமயத்தில் டூவிலரில் சென்றால் அவர்களை பிடிக்கமுடியாது , என்று நினைத்து, அருகில் காரில் சென்றவர்களிடம் காரை இரவல் கேட்டுள்ளனர். இச்சமயத்தில் போலீசாரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

வேனை திருடிச்சென்ற கொள்ளையன் வேனின் சைடு மிரர் வழியாக வங்கி ஊழியரின் வண்டிக்கு பின்னால் போலீஸ் வேன் வருவதை தெரிந்துக்கொண்டு, போலீஸ் கையில் அகப்பட்டால் அவ்வளவுதான்... என்பதை புரிந்துக்கொண்டு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு, வேனின் பின்னால் வந்த காரில் ஏறி தப்பிவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது குறித்து காந்திதாம் போலீசார் சாகர் பாக்மர் கூறுகையில், “வேனுக்குள் இருந்த 2 கோடிப்பணம் அப்படியே இருந்தது, வேனின் வழக்கமான நடமாட்டத்தை அறிந்த யாரோ ஒருவர்தான் பணத்தை திருட திட்டம் போட்டு இருக்கணும். நாங்கள் கொள்ளையன் தப்பி ஓடிய கார் குறித்து, சிசிடிவி உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் திருடனை பிடிப்போம்” என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.