காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு Pt web
குற்றம்

மானாமதுரை | காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்.!

மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன், கால் முறிவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

Premkumar S

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கியதில், ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, தாக்குதலுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்த நிலையில் தான், இந்தக் குற்றச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து மானாமதுரை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

காவல்துறை

காவல்துறையினரின் தேடுதலில், ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இவர்களை கைது செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது ஆகாஷ் என்ற இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, கால் முறிந்த ஆகாஷ் டெலிசன் முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சூழலில் தான், இன்று அவர் சிகிச்சை பலனின்றி மூச்சுத் தினறல் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன் பேசுகையில், “ எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும் என் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வைத்துக் கொண்டனர். பின்னர், எனது மகன் கிடைத்து விட்டதாக கூறி எங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறி மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் தந்தை

அப்போது, எனது மனைவி நேரில் சென்று பார்த்த போது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென இன்று காலை காவல்துறையினர் போன் செய்து எனது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கியுள்ளனர். என் மகன் மீது காவல்துறையினர் சாதிய ரீதியாக பேசி குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், என் மகன் உயிரிழந்திருக்கிறான் என் மகன் தவறு செய்திருந்தால் அதற்கு தூக்கு தண்டனை கூட கொடுத்திருக்கலாம், இதுபோன்று அடித்து கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தான், காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் உயிரிழந்திருப்பதைக் கண்டித்து, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகாஷின் உறவினர்கள் மதுரை–ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை–ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மானாமதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அஜித்குமார் லாக்கப் டெத் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.