இருவர் கைது pt desk
குற்றம்

மன்னார்குடி | ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆந்திர குழந்தைகள் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆந்திராவில் இருந்து வாத்து மேய்ப்பதற்கு குழந்தைகளை விலை கொடுத்து வாங்கிவந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: விஜயகுமார்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி உண்டிமண்டல் பகுதியைச் சேர்ந்த பாண்டி லாரன்ஸ் (23) மற்றும் அவரது சகோதரி பாண்டி பத்மா (38) ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு வாங்கியுள்ளனர் இதையடுத்து மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் நான்கு குழந்தைகள் ஆடு மேய்த்துள்ளனர். சில குழந்தைகள் அழுதவாறு நின்று கொண்டிருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் எங்கள் பெற்றோர்கள் கிடையாது. எங்களை வாத்து மேய்ப்பதற்கு அழைத்து வந்துள்ளனர் என கதறி உள்ளனர். இது குறித்து மேல வாசல் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் குழந்தைகள் விற்கப்பட்டதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 1098 சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் மன்னார்குடி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி காவல் நிலையத்தில் குழந்தையை வாங்கிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாண்டி லாரன்ஸ், பாண்டி பத்மா ஆகியோர் மீது இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு இளம் சிறார்களை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்துள்ளனர். வாத்து மேய்ப்பதற்கு குழந்தைகளை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.