போலி ஆவணங்கள் தயாரிப்பு pt web
குற்றம்

போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி.. வீட்டின் ரகசிய அறையில் ஆய்வகம்.. 8 பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் சொத்துகளை மோசடியாக அபகரிக்க முயன்ற வழக்கில், ரவுடிகள் ராகேஷ், கார்த்திக், வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெ.அன்பரசன்

சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் சொத்துகளை மோசடியாக அபகரிக்க முயன்ற வழக்கில், ரவுடிகள் ராகேஷ், கார்த்திக், வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.2 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஜவபர் சாதிக் மற்றும் பாரதிராஜா போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் வசித்துவரும் தொழிலதிபர் சுப்பிரமணி(55) என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், அவருக்கு சொந்தமான மடிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 4,715 சதுர அடி கொண்ட 2 வீட்டு காலி மனைகளை மோசடியாக அபகரிக்க வேண்டும் என திட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சொத்தின் உரிமையாளராகிய தான் இறந்துவிட்டதாகவும், கே.கே நகரை சேர்ந்த பிரியா என்ற ஆள்மாறாட்ட நபர் மட்டுமே வாரிசு என்பது போல போலியான வாரிசு சான்று ஏற்படுத்தி வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து தன்னுடைய வீட்டுமனைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், அப்புகாரில், இந்த மோசடியில் சுமார் ரூ.2 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தரும்படி கூறியிருந்தார்.

மத்திய குற்றப்பிரிவு

அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், சென்னை, கே.கே நகரை சேர்ந்த ரவுடி ராகேஷ் மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் திட்டமிட்டு மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. ரவுடிகள் ராகேஷ், கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து, அவர்களது நண்பர்களான பால சுந்தர ஆறுமுகம் (எ) வசந்த், சாலமன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து தொழிலதிபர் சுப்ரமணிக்கு சொந்தமான தாய் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, அதே போன்று போலியான ஆவணம் தயார் செய்து மோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த சொத்தை கே.கே நகரைச் சேர்ந்த பிரியா என்பவரை வாரிசாக சேர்த்து போலி வாரிசு சான்று மற்றும் பட்டா ஆவணங்கள் உருவாக்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அந்த சொத்தை கீழ்கட்டளையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவரிடம் ரூ.1,55,00,000 பணத்தை பெற்றுக்கொண்டு கிரையம் செய்து ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து ரவுடிகளான ராகேஷ், வெங்கடேஷ், கார்த்திக், பிரியா, பால சுந்தர ஆறுமுகம் (எ) வசந்த், சாலமன்ராஜ், ஆகிய 6 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராகேஷ், வெங்கடேஷ், சாலமன் ராஜ்

முன்னதாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களில் ராகேஷ் பிரபல ரவுடி என்பதும், இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 2010 ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்ற அருகே வைத்து ரவுடி சின்னா (எ) சின்ன கேசவலு மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை வெட்டி படுகொலை செய்த கொலை வழக்கு உள்ளிட்ட மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதேபோல ரவுடி வெங்கடேஷ் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 4 வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் விசாரணையில், இந்த நிலமோசடிக்கு போலி பத்திரங்கள் தயாரித்துக் கொடுத்தது கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா(44) மற்றும் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜஹபர் சாதிக்(42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜவபர் சாதிக் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

போலி பத்திரங்கள் தயாரித்து பலவேறு மோசடி நபர்களிடம் அதனை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை ஜவபர் சாதிக் மற்றும் பாரதி ராஜா விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக, ஜவபர் சாதிக் நில மோசடி வழக்கில் போலி பத்திரங்கள் தயாரித்த விவகாரத்தில் கடந்த 2017 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், அதன் பிறகு வெளியே வந்த ஜவபர் சாதிக் திரைத்துறையில், விஷ்வல் எடிட்டிங் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும், மேலும் தற்போது குறும்படங்கள் மற்றும் விளம்பர வீடியோக்கள் செய்து தரும் அலுவலகம் நடத்தி வருகிறார் என்பதும் தெரியவந்தது. அதேபோல, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரதி ராஜா என்பவர் கொளத்தூர் பகுதியில் நவீன் ஜிம் ஒன்றை நடத்தி வருவதும், அந்த ஜிம்மில் மாஸ்டராக இருந்து வருவதும் தெரியவந்தது.

இருவரும் போலி பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் செய்து நண்பர்களாகியுள்ளனர். மேலும், போலியான தாய் பத்திரம், இறப்பு சான்றிதழ், வாரிசுரிமை சான்றிதழ் மற்றும் பல ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் வேலையை ஒன்றாக பார்த்து வந்துள்ளனர். போலி பத்திரங்கள், ஆவணங்கள் செய்வதில் ஜஹபர் சாதிக் தான் முக்கிய நபர் எனவும், இதுபோன்ற பல நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து பணம் பெற்றுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜஹபர் சாதிக் உருவாக்கும் போலி ஆவணங்களை, பாரதிராஜா நடத்தி வரும் ஜிம்மில் வைத்து மோசடிக்காரர்களுக்கு கைமாற்றி விடுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, போலீசார் ஜஹபர் சாதிக் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில் லேப் உருவக்கியுள்ளதும், அந்த லேபில் போலி ஆவணங்கள் தயாரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜஹபர் சாதிக், பாரதிராஜா

பின்னர், ரகசிய அறையில் இருந்து போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களான அதிநவீன பிரிண்டர்கள், போலி ஸ்டாம்பர்கள், திரை அச்சு இயந்திரம் (Screen Printing), அரசின் பல்வேறு துறைசார்ந்த போலியான ரப்பர் ஸ்டாம்புகள், போலியான முத்திரை தாள்கள், போலியான பட்டாக்கள், வாரிசுசான்றுகள், வெளிநாட்டின் தபால்தலைகள், வெளிநாட்டில் இருந்து பதியப்படும் அட்ஜிடிக்கேட் பத்திரம் மற்றும் நிலத்தின் தாய் பத்திரங்கள் ஆகியவை பெருமளவில் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்களின் சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகம் எனவும், தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களால் ரூ.200 கோடிக்கும் அதிகமான மோசடிகள் தடுக்கபட்டுள்ளதாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது வீட்டிலேயே ரகசிய அறையில் லேப் அமைத்து அதன் போலி ஆவணங்கள் தயார் செய்து வந்த ஜவபர் சாதிக் யார் யாருக்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்திருக்கிறார். அந்த நபர்கள் யார் யாரை ஏமாற்றத்திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.