கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள் file image
குற்றம்

குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பது போல் நடித்து பெண்கள் செய்த காரியம் - காத்திருந்த அதிர்ச்சி?

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் வசித்து வருபவர் ஸ்டீபன்ராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்குச் சென்ற நிலையில் இவரது மனைவி ஜெனிபர் மற்றும் உறவினர்கள் வீட்டிலிருந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் 6 பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது போல் நடித்துள்ளனர்.

குற்றம்

அவர்களில் ஸ்டீபன்ராஜ் வீட்டில் 2 பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து தண்ணீர் கேட்டுள்ளனர். ஜெனிபர் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றார். அந்த நேரத்தில் ஒரு பெண் பின் பக்கமாக வீட்டுக்குள் சென்று பீரோவிலிருந்த நகைப் பெட்டிகளை எடுத்துள்ளார். சத்தம் வருவதைக் கேட்டு ஜெனிபர் உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண் நகைகளைத் திருடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பயத்தில் ஜெனிபர் கூச்சல் போட்டுள்ளார்

இதனைதொடர்ந்து வெளியில் பிச்சை எடுப்பது போல் நடித்துக் கொண்டிருந்த மற்ற 5 பெண்களும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்று 5 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் 5 பேரும் ஈரோட்டைச் சேர்ந்த மீனாட்சி, முத்தம்மாள், மங்கம்மாள், முனியம்மாள், கவிதா என்பது தெரியவந்தது.

மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

அவர்களிடம் இருந்த 10 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிச் சென்று பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர். இது தொடர்பாக 5 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.