செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது தந்தையின் ஆலையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக "சங்கம்" என்ற திருமண செயலியில் பதிவு செய்துள்ளார். ஸ்ரீ ஹரிணி என்ற ஐடியில் இருந்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியுள்ளார்.
நாளடைவில் மிகவும் நெருக்கமாக பழகியதால் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வார் என நினைத்த இளைஞர், அவரிடம் தன்னை பற்றி அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார். இந்த நிலையில் பெண் ஐ.டி-யில் இருந்து பேசிய நபர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, இளைஞர் ரூபாய் 88 லட்சம் பணத்தை கிரிப்டோகரன்சியில், பெண் ஐடியில் இருந்து பேசிய நபர் சொல்லிய லிங்கில் அனுப்பி உள்ளார். இதற்குப் பின் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து புகாரின் பேரில் தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மொத்தம் 25 முறை இரண்டு சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. வங்கிக் கணக்குகள் லட்சுமி மற்றும் ஆனந்தி ஆகியோருக்குச் சொந்தமானவை என்பதும், இருவரும் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இளைஞரிடம் அந்த வங்கிக் கணக்குகளை வைத்து மோசடியில் ஈடுப்பட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த யுவராஜன் (33), கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் (32), சிவா, நந்தகோபால் (30) ஆகிய நான்கு நபர்களை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் பணம், 6 செல்போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலைகள், 12 வங்கி பாஸ்புக்குகள், 46 சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்து தேனி மாவட்ட சைபர் கிரைப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.