கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் சிதம்பரம் நகரப் பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர், இருசக்கர வாகனத்தில் 3 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கவரிங் நகைகளான 1,115 செயின்களை வாகனத்தில் எடுத்து வந்துள்ளார். அப்போது, வ.உ.சி தெருவில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்த உள்ளே சென்றுள்ளார்.
இந்த நிலையில், அதே பாரில் இருந்து வெளியே வந்த மர்மநபர் ஒருவர், நீண்டநேரம் காத்திருந்து நோட்டமிட்டு சௌந்தராஜன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கவரிங் நகைகளை அட்டைப் பெட்டியுடன் எடுத்துக்கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வெளியே ஓடிவந்த கூலித் தொழிலாளி சௌந்தர்ராஜன் கவரிங் நகைகள் மொத்தமாக காணாமல் போனதை பார்த்து பதறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி தேடிப் பார்த்தார். ஆனால் மர்ம நபர் தென்படவில்லை
இதனையடுத்து, மீண்டும் பாருக்குள் ஓடிவந்தவர் காணாமல் போனது பற்றி பார் ஊழியர்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்து பார்த்தபோது, பாரில் மது அருந்திய ஒரு மர்ம நபர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சௌந்தர்ராஜன், சிசிடிவி காட்சியை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்து திருடப்பட்ட கவரிங் நகைகளை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருடப்பட்ட கவரிங் நகை மதிப்பு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது போதைக்கு ஆசைப்பட்ட கூலித் தொழிலாளி 35 கிலோ கவரிங் நகையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.