2025 | ஒரே ஆண்டில் 25,278 பேருக்கு டெங்கு.. பொது சுகதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து பொது சுகாதாரத்துறை முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்களின்படி, மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஸ் - எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் தினசரி 500க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அது தற்போது 100க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, கடந்தாண்டு 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பாதியாகக் குறைந்து 25,278 ஆக பதிவாகியுள்ளது எனவும் கடந்தாண்டு 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், 6,284 பேரும், திருவள்ளூரில் 2,094 பேரும், கோவையில் 1,882 பேரும், கடலூரில் 1,525 பேரும் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிராமங்களைவிட நகர்ப் பகுதிகளில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல், ஜனவரி, பிப்ரவரி வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

