செய்தியாளர்: அ.ஆனந்தன்
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளது. இதனால், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கை பருத்தித்துறை கடற்கரைக்கு கஞ்சா கடத்தி வர இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை காங்கேசன்துறை, பருத்திதுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கடற்பரப்பில் வழக்கத்தை விட இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பை நோக்கி சர்வதேச கடல் எல்லை வழியாக வந்த இரண்டு இலங்கையைச் சேர்ந்த பைபர் படகை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்தப் படகை சோதனை செய்த போது, அதில் சுமார் 320 கிலோ உயர்ரக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை சேர்ந்த நால்வரை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையில், கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா 3 லட்ச ரூபாய் (இலங்கை மதிப்பு) என்பதும், மொத்தமாக ரூ.9.60 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பைபர் படகு, கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நால்வரும் பருத்தித்துறை போலீஸிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.