2 பெண்கள் உட்பட 3 பேர் கைது pt desk
குற்றம்

தஞ்சாவூர்: போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி – 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர் சீனிவாசபுரம், செக்கடி பகுதியைச் சேர்ந்த சின்னப்பாண்டி என்பவரின் மனைவி சரஸ்வதி (38) ஆகிய இருவரும் கை வளையல் மற்றும் கை செயின் ஆகியவற்றை அடமானம் வைத்துள்ளனர்.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் முதல் இதே நிதி நிறுவனத்தில் பலமுறை கை வளையல் மற்றும் கை செயினை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் அதே போன்று கை செயின், வளையல் ஆகியவற்றை அடமானம் வைக்க வந்ததால் நிதி நிறுவன அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன், கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். முன்னதாக இவர்கள் அடமானம் வைத்த நகைகளை சோதனை செய்த போது அதில் ஹால் மார்க் முத்திரை இருந்துள்ளது. ஆனால், வெள்ளி நகைகளுக்கு தங்கம் முலாம் பூசியிருப்பது தெரிய வந்துள்ளது.

Arrested

இதையடுத்து திவ்யா, சரஸ்வதி ஆகிய இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இவர்களிடம் போலி நகைகளை கொடுத்தது தஞ்சாவூர் கீழவாசல், கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மணிவண்ணன் (37) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிவண்ணனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மணிவண்ணன் கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இதுபோன்ற போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி கவிதா என்பவரை தேடி வருகின்றனர்.