கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் Pt web
குற்றம்

விழுப்புரம் | ஆந்திராவில் இருந்து சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல்.. 200 கிலோ குட்கா பறிமுதல்!

ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

PT WEB

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்களால் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன எனக் கூறப்படும் நிலையில், நேற்று விழுப்புரம் நகரப் பகுதியான செஞ்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஆந்திராவில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காரில் கடத்தி வருவதாக சிறப்பு தனிப்படை காவலர்களுக்கு கிடைத்தது. இத்தகவலின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

இதனை தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் காரினை காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஹர்சன் குமார்(26) மற்றும் உசைன்கான் (29) என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில், இருவரையும் கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர்களிடம் இருந்த 200 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.