கொரோனா வைரஸ்

கொரோனாவால் உயிரிழப்பு: தூய்மைப் பணியாளர் இருவருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

JustinDurai
கொரோனா தடுப்புப் பணியின் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவத் துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும், கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில், கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம் வில்லியவரம்பல் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர் மௌனதாஸ் மற்றும் விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர் ராஜேந்திரன் ஆகிய இருவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிவாரண தொகையை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு மூலமாகவோ உரிய நடைமுறை விதிகளின்படி வழங்கிட மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.