ராமாயணா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யஷ், ஏஆர் ரஹ்மானை புகழ்ந்து பேசினார். தமிழ் பாடல்களை கேட்டு மொழியை கற்றுக்கொண்ட அனுபவத்தை பகிர்ந்து, ரஹ்மானின் இசை துறைக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார். ராமாயணா படத்திற்கு அவர் இசையமைப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘ராமாயணா: பகுதி 1’. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் அனுமாராக சன்னி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
ராமாயணா பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் மற்றும் உலகளாவிய விளம்பரச் செலவுகள் சேர்த்து 4000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ராமாயணா முதல் பாகம் வரும் நவம்பர் 5, 2026 அன்று உலகளவில் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி, நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அனைவரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய யஷ் ரஹ்மானை புகழ்ந்து பேசினார். அப்போது, “எனக்கு மியூசியன்களை பார்த்தாலே மிகப்பெரிய மரியாதை உண்டு. நடிகர்கள் என எடுத்துக்கொண்டால் அவர்கள் இயக்குநர் கூறும் வசனங்களை பேசி நடிக்கக்கூடியவர்கள். இயக்குநர்கள் கதைசொல்லி கேட்டுவிடலாம், ஆனால் இசையமைப்பாளர்கள் ஒரு விசயத்தை புதியதாக உருவாக்குகிறார்கள், அதை மனதுக்கு நெருக்கமானதாக மாற்றுகிறார்கள். அதனாலே எனக்கு யாராவது பாடினாலோ அல்லது எதாவது இசைக்கருவியை இசைத்தால் கூட பிரம்மிப்பாய் இருக்கும்.
ஏஆர் ரஹ்மான் சார் உங்களுடைய பாடலை கேட்டுத்தான் நான் தமிழ் பேசவே கற்றுக்கொண்டேன். தமிழ் சினிமாத்துறைக்கு நீங்கள் ஆற்றியவை மிகப்பெரியது. உங்களுக்கு பாடலுக்கு தான் நான் சிறுவயதில் நடனமாடினேன். அப்போதெல்லாம் கேசட்டில் உங்கள் பாட்டை போட்டு கேட்டு கேட்டு தமிழ் கற்றுக்கொண்டேன். அந்தபாடல் எனக்கு நியாபகம் இருக்கிறது ‘பக்கத்து சீட்டில் பாட்டி உக்காந்தா, டேக் இட் ஈஸி பாலிஸி’ எனக்கு அப்போது அர்த்தம் புரிந்துவிடும். எனக்கு எப்போதும் உங்களுடைய தமிழ் பாடலை கேட்டால் தான் நெருக்கமாக உணரமுடியும். அதே பாட்டை இந்தியில் கேட்டால் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கும். இந்தில் நீங்கள் இசையமைத்த ரங்கீலா படத்தின் ஹே ராமா பாடலை கேட்டுதான் இந்தி கூட நான் தெரிந்துகொண்டேன். நீங்கள் ராமாயணத்திற்கு இசையமைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என பேசியுள்ளார்.