லோகேஷ் - அட்லீ - நெல்சன் Pt web
சினிமா

100 கோடி, 75 கோடி சம்பளம்? பான் இந்தியா ஈர்ப்பு.. தெலுங்கு சினிமாவுக்கு நகரும் தமிழ் இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்கள் தற்போது தெலுங்கு திரையுலகை நோக்கி நகர்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார், அதிக சம்பளம் மற்றும் பான் இந்தியா ஈர்ப்பின் காரணமாக தெலுங்கு திரையுலகை நோக்கி நகர்கின்றனர். தெலுங்கு சினிமாவின் பெரிய பட்ஜெட் மற்றும் வலுவான விநியோகக் கட்டமைப்பு, இளம் இயக்குநர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் படைப்பு சுதந்திரம் வழங்குகிறது.

அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்கள் தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அட்லி தற்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் 'AA22' திரைப்படம் சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. இதற்காக அட்லிக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் அல்லு அர்ஜுனுடன் கைகோக்கிறார். அந்தப் படத்திற்கு லோகேஷுக்கு 75 கோடி ரூபாய் ஊதியமாகப் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்சன் திலீப்குமார் ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் படமும் இதே போன்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் அமையவுள்ளது.

அல்லு அர்ஜூன், அட்லீ

தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்கூட அதிகபட்சம் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இயக்குநர்களுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கிடைப்பதே அரிது. மேலும் பெரும்பாலான இளம் இயக்குநர்கள் ஒரு படத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர். தெலுங்குத் திரையுலகம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வலுவான விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், 500 முதல் 750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் துணிகிறது. எனவே இயக்குநர்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் தர அவர்கள் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன், பிரபாஸ் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு இருக்கும் 'பான்- இந்தியா' சந்தை மதிப்பும் இயக்குநர்களை அங்கு ஈர்க்கின்றன. இந்திய மொழி திரைப்படங்களில் இந்திக்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கே சர்வதேச சந்தையிலும் வணிக மதிப்பு அதிகம். இதுபோன்ற காரணங்களால் தமிழைவிட தெலுங்கில் இயக்குநர்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு வரை கூடுதல் ஊதியம் மற்றும் லாபத்தில் பங்கு (Profit Sharing) கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமா

ஆக்ஷன் கதைகளை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்குநர்களுக்கு, தெலுங்கு சினிமாவில் உள்ள 'மாஸ் ஹீரோ' பாணி கதைகளுக்கான களம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஒரு கூடுதல் ஈர்ப்பாக இருக்கலாம். மொத்தத்தில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள் தெலுங்கு திரையுலகை நோக்கி நகர்வது வெறும் மொழி சார்ந்த நகர்வல்ல. அதிக ஊதியம், மேம்பட்ட படைப்பு சுதந்திரம் மற்றும் உலகளாவிய சந்தையை நோக்கிய ஒரு திட்டமிட்ட தொழில்முறை நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.