'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கும் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “இந்த விவகாரம் தொடர்பாக, ஒட்டுமொத்த தெலங்கானா திரையுலகினரும் நாளை முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்திக்க உள்ளோம். திரைப்படத் துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாலமாகச் செயல்படுவோம். முன்னதாக, பாதிக்கப்பட்ட ஸ்ரீதேஜ் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தோம். அவரது குடும்பத்திற்கு திரைத்துறையும் அரசாங்கமும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன” எனத் தெரிவித்தார்.
கடந்த 4ஆம் தேதி, புஷ்பா 2 படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேவந்தார்.
இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அதன்படி நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி அல்லு அர்ஜுன் சார்பில் 1 கோடி ரூபாயும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் தலா 50 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.