ரோபோ சங்கர்  web
சினிமா

மேடை முதல் திரை வரை.. சோகத்தில் திரையுலகம்.. யார் இந்த ரோபோ சங்கர்?

ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PT WEB

ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரோபோ சங்கர் மறைவை ஒட்டி அவரது திரைப்பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடி செய்து, பார்ப்பவர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் இன்று நம்மோடு இல்லை.. 2 நாட்களுக்கு முன்பு வரை கேமரா.. ஆக்‌ஷன் என்ற சொல்லுக்கு நடித்துக் காட்டியவர், இப்போது மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார். ரோபோ சங்கர் மறைவை ஒட்டி அவரது திரைப்பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். சமீப ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் காமெடி ஷோக்களில் ரோபோ சங்கரை ஒரு நடுவராக பார்த்திருப்போம்.

ஆனால், தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகள் உருவான காலகட்டத்திலேயே கலக்கலான performance ஆல் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். மதுரையை பூர்வீகமாக கொண்ட ரோபோ சங்கர் தனது உடல் மொழியை ஆயுதமாக்கி, சேட்டைகள் மூலமாக சிரிக்க வைத்தவர். ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி என மேடைக் கலைஞராகவே தன் வாழ்வைத் தொடங்கினார். மேடை நிகழ்ச்சிகளுக்கு இடையே, ரோபோவைப்போல் உடல் அசைவுகளைச் செய்து மக்களைக் கவர்ந்தவர்தான் இந்த சங்கர்.

இப்படியாக மேடைகளில் அவர் போட்ட ’ரோபோ’ வேடம், பின்னாளில் அடையாளமாக மாறி, ’ரோபோ சங்கர்’ என்ற அடைமொழியாகவே மாறிப்போனது. 1990களின் இறுதியில் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு, தொடக்கத்தில் சிறு கதாபாத்திரங்கள்கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2007ஆம் ஆண்டில் வெளியான ’தீபாவளி’ படத்தில், கூட்டத்தில் ஒருவனாக வந்த ரோபோ சங்கர், 2013ஆம் ஆண்டு வெளியான ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சவுண்ட் சுதாகர் கதாபாத்திரத்தில் கவனிக்கப்பட்டார்.

2015இல் வெளியான தனுஷின் ‘மாரி’ படத்தில் அவர் நடித்த ’சனிக்கிழமை’ கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன்பின் விஜய்யின் ’புலி’, அஜித்தின் ’விஸ்வாசம்’, சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்தார். டைமிங் மிஸ் ஆகாத ரெய்மிங் காமெடி இவரின் தனித்துவம். அதையும் ஹீரோக்களோடு சேர்ந்து அவர் எதார்த்தமாகச் செய்யும்போது, திரையரங்கில் கைதட்டலுக்கு பஞ்சம் இருக்காது.

காமெடியில் கவர்ந்த ரோபோ சங்கர் நடிகராக மட்டுமின்றி, டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார். ’தி லயன் கிங்’, ’முபாசா’ போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் உலக அளவில் மிக பிரபலமானவை. அதன் தமிழ் டப்பிங்கில் ’பும்பா’ எனும் கதாபாத்திரத்திற்கு இவரின் குரல் தனிச்சிறப்பைச் சேர்த்தது. நடிகராக உடல்மொழியில் சிரிக்க வைத்தவர், குரலால் ’பும்பா’ கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தார். இப்படி, ரோபோ சங்கரின் சிறப்புகளைச் சொல்ல செய்திகள் பல உள்ளன. இதற்கிடையே, சமீப ஆண்டுகளில் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

ரோபோ சங்கர்

எனினும், முழுமையாகக் குணமடையாத அவர், மருந்துகளை எடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 2 தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இருந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைகள் மேற்கொண்டும், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. வாழ்வின் பல தருணங்களில் வலியை அனுபவதித்த ரோபோ சங்கர், நம் வலிகளை மறக்க வைத்து சிரிக்க வைத்த கலைஞன். ஆனால் இப்போது சத்தமின்றி மவுனித்து கிடப்பதைக் கண்டு துயரத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே துயரத்தில் இருக்கிறது.