’எனை விட்டு நீங்கி விடுவாயா நீ..?’ ரோபோ சங்கர் மரணத்திற்கு கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்!
சின்னத்திரையில் ஸ்டேண்டப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமடைந்த நடிகர் ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை மற்றும் நீர்சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கரின் இழப்புக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், தன்னுடைய தீவிர ரசிகனின் மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உருக்கமாக இரங்கல் தெரிவித்த கமல்..
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ரோபோ சங்கர். எப்போதெல்லாம் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகிறதோ, அப்போதெல்லாம் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, ஆரத்தி எடுத்து கொண்டாடுவது என ஒரு ரசிகராக அர்ப்பணிப்புடன் இருப்பார். சிலமுறை சேட்டைகள் அதிகமானால் கமல்ஹாசன் தன்னை திட்டியதாகவும், செல்லமாக அடித்ததாகவும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.