Dhurandhar திரைப்படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகி, அதன் அரசியல் கருத்துக்கள் மீண்டும் பேசப்படுகிறது. Aditya Dhar இயக்குநர், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளைப் பற்றிய தனது பார்வையை திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை தடுக்க இந்திய உளவாளி பாகிஸ்தானில் களமாடுவது கதையின் மையமாக உள்ளது.
Dhurandhar திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 2 மாதங்களுக்குப் பின்னர் தற்போது ஓடிடி-யில் வெளியாகி மீண்டும் பேசப்படுகிறது. அதனால், திரைப்படத்தில் பேசப்படும் அரசியல் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இயக்குநர் Aditya Dhar தன்னுடைய அரசியல் கருத்துக்களை திரைப்படத்தின் மூலம் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலுக்கான சதிவேலைகள் பாகிஸ்தானில் திட்டமிடப்படுகிறது. அதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் ஒரு உளவாளி பாகிஸ்தான் சென்று களமாடுவதுதான் திரைப்படத்தின் கதை.
முதல் காட்சியில் இருந்தே காட்சிகள் அனைத்தையும் பிரம்மாண்டமாக பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒரு திரைப்படத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சிகளே பிரதானமாக இருக்க வேண்டும். வசனத்தை விட காட்சிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்க வேண்டும். அதை நேர்த்தியாக செய்திருக்கிறார் இயக்குநர். ஹீரோவின் அறிமுகம், அவர் எதிர்கொள்ளும் சவால்கள், சமயோகித புத்தி ஆகியவை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் வழியாக அவரது அரசியல் பார்வையையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். பாகிஸ்தானில் இருந்து உத்தரபிரதேசத்தின் வழியாக சட்ட விரோத செயல்கள் நடைபெறுகின்றன. அதை தடுக்க முடியவில்லை. முயன்றால் அந்த பிரிவினர் வன்முறையை தூண்டிவிட்டு மாநிலத்தையே எரித்து விடுவார்கள் என்ற உளவுத்துறை அதிகாரிகள் ஆதங்கத்துடன் பேசுகின்றனர். பாகிஸ்தானுக்குள் நுழைய முடிந்த நம்மால் உத்தரபிரதேச மாஃபியாக்குள் நுழைய முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் அரசு வரும் என்பதையும் பதிவு செய்கிறார் இயக்குநர் Aditya Dhar.
பாகிஸ்தானிலேயே முழுக் கதையும் இருப்பது போன்று திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தில் யாரும் பர்தா அணியவில்லை. கதையின் நாயகி மார்டன் டிரஸிலேயே இருப்பார், விழாக்களில் நவீன உடை அணிந்து பெண்கள் நடனம், pub-ல் நடனம் என பர்தா இல்லாத காட்சிகளே இடம்பெறுகின்றன. ஆனால், ஒரே ஒரு சீன்... ஒரு shot-ல் மட்டும் ஒருவர் பர்தா அணிந்து வருகிறார். உள்ளூர் ரகசிய காவல் பிரிவு தளத்திற்கு பர்தா அணிந்து வரும் ஒருவரைப் பார்த்து, யாரென்று காவலர் கேட்கிறார். பர்தாவை விலக்கி பார்த்தால் ஆயுதங்களுடன் உள்ளூர் ரவுடி ஒருவர் இருக்கிறார். இதன் அர்த்தத்தை நீங்கள் பார்த்தால் புரியும்.
அதேபோல், திரைப்படம் முடியும் வேளையில், "இது புதிய இந்தியா உங்கள் வீட்டிற்குள் புகுவோம் என்ற வசனத்துடன் திரைப்படம் முடிகிறது". இந்த வசனம் தற்போதைய ஆட்சியில் பிரபலமாக பேசப்படும் வசனம். ஒரு இயக்குநரால் மிக நேர்த்தியாக திரைப்படத்தை எடுக்க முடியுமென்றால் தன்னுடைய கருத்துக்களை அதிகமான மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு இந்த திரைப்படமும் உதாரணம். ஒரு கலைஞனாக தன்னுடைய அரசியல் பார்வையை நேர்த்தியாக திரைப்படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் Aditya Dhar. அதை ஆதரிப்பதும், விமர்சிப்பதும் மக்கள் கையில்.
அடுத்த மாதம் இத்திரைப்படத்தின் 2வது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.