Pawan Kalyan Ustaad Bhagat Singh
சினிமா

"அது இல்லை.. கதையை மாற்றிவிட்டோம்!" - பவன் கல்யாண் | Pawan Kalyan | Ustaad Bhagat Singh

நான் ஹீரோவாக வர வேண்டும் என்றால், என்னை மட்டும் கூப்பிடுங்கள். தம்பி வேண்டும் என்றால் சிரஞ்சீவியை கூப்பிடுங்கள். அவர் என் அருகில் இருந்தால் நான் ஹீரோ என்ற விஷயத்தையே மறந்துவிடுவேன்.

Johnson

பவன் கல்யாண் நடிப்பில் ஹரீஷ் ஷங்கர் இயக்கியுள்ள படம் `உஸ்தாத் பகத் சிங்'. இப்படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பவன் கல்யாண், "சினிமா என்பது எனக்குப் பிடித்த ஒன்று. எனக்கு உணவளித்தது சினிமா, மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை அளித்தது சினிமா. அதனாலேயே தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பேன். இயக்குநர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கதையை எப்படிச் சிறப்பாக நடிக்கலாம் என்று யோசிப்பேன். தெலுங்கு சினிமா அடைந்திருக்கும் உயரம், ஆஸ்கர் வரை சென்றுள்ள வளர்ச்சி எல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படியான தெலுங்கு சினிமாவில் நானும் ஒரு பாகம் என நினைப்பதில் பெருமையாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஹீரோ என்றால், அது மெகா ஸ்டார் சிரஞ்சீவி. ஹரீஷ் இந்த நிகழ்வுக்கு சிரஞ்சீவியை அழைக்க வேண்டும் என சொன்னபோது, உங்களுக்கு நான் ஹீரோவாக வர வேண்டும் என்றால், என்னை மட்டும் கூப்பிடுங்கள். தம்பி வேண்டும் என்றால் சிரஞ்சீவியை கூப்பிடுங்கள். அவர் என் அருகில் இருந்தால் நான் ஹீரோ என்ற விஷயத்தையே மறந்துவிடுவேன். என்ன பேச வேண்டும் என்றுகூட தெரியாது. அண்ணன் சிரஞ்சீவி, உஸ்தாத் பகத் சிங் ட்ரெய்லர் பார்த்து வாழ்த்தினார்.

சினிமாவை துவங்கும்போது எல்லோருக்கும் நல்ல பணம் வர வேண்டும் என நினைப்போம். ஆனால், படம் துவங்கிய பின்னர் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரும். சினிமா ஜெயிக்க வேண்டும் என்றே எல்லோரும் பணியாற்றுவோம். நினைத்ததை எடுத்து சினிமாவை வெற்றி அடைய வைப்பது சாதாரண விஷயமில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் என ஹரீஷ் சங்கரை அழைத்து வந்தார்கள். `கப்பர் சிங்' படத்துக்குப் பின் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியவில்லை.

Pawan Kalyan

அவர் எடுத்துவந்த கதையை அப்படியே எடுக்க முடியவில்லை. கொஞ்சமாக கதை மாறியது. படம் எடுப்பதிலும் சில தாமதங்கள் ஏற்பட்டன. எனக்கு இருக்கும் வேலைப்பளுவும் இடையில் சரியாக திட்டமிட்டு ஹரீஷ் எடுத்தார். அது, இனிமேலும் என்னால் பணிகளுக்கு இடையில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்தப் படம் ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படம் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்" என்றார்.