Kantara Chapter 1 Water Can
சினிமா

"4ம் நூற்றாண்டுல தண்ணி கேனா..." ட்ரோலுக்கு பின் காந்தாரா காட்சியில் மாற்றம்! | Kantara | Water Can

இப்படத்தில் பிரம்மகலசா பாடலில் ஒரு விருந்து காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியின் ஒரு ஓரத்தில் பிளாஸ்டிக் தண்ணி கேன் வைக்கப்பட்டிருந்தது.

Johnson

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் `காந்தாரா சாப்டர் 1'. அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படம் 11 நாட்களில் 655 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

Kantara Chapter 1

இப்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயத்தை மையமாக வைத்து அதிகம் கிண்டல் செய்யப்படுகிறது. அதற்கு காரணம் என்ன என்றால் கதை நிகழும் காலகட்டம். `காந்தாரா' படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகி இருந்தது. ஷிவாவின் தந்தை அப்பண்ணா மர்மமான முறையில் காணாமல் போக, எப்படி தன் தந்தை காணாமல் போனார் என்ற கேள்வியை ஷிவா கேட்பதிலிருந்து துவங்கும் `காந்தாரா சாப்டர் 1'. இதற்கான விளக்கமாக சொல்லப்படும் கதை கதம்பர் வம்சம் பற்றியும், காந்தாரா வனப்பகுதிகளை சேர்ந்த பூர்வகுடிகள் பற்றியும் நகர்கிறது. எனவே இக்கதை நிகழும் காலகட்டம் கிட்டத்தட்ட 4ம் நூற்றாண்டு.

இப்படத்தில் பிரம்மகலசா பாடலில் ஒரு விருந்து காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியின் ஒரு ஓரத்தில் பிளாஸ்டிக் தண்ணி கேன் வைக்கப்பட்டிருந்தது. இதை கவனித்த ரசிகர் ஒருவர், அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட, அது காட்டு தீ போல் பரபரப்பாக பரவியது. அந்த காலத்தில் எப்படி தண்ணி கேன் இருந்திருக்கும் என இதனை ட்ரோல் செய்தனர். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் எட்டாவது சீசனில் பேப்பர் காபி கப் தவறுதலாக இடம்பெற்று ட்ரோல் ஆனது. அதனுடன் இந்த தண்ணி கேன் காட்சியை ஒப்பிட்டு வந்தார்கள். இதைப் பற்றிய கிண்டலை படக்குழு கவனித்ததோ என்னவோ தெரியவில்லை. தற்போது யூடியூப்பில் உள்ள அப்பாடலில் இருந்து தண்ணி கேன் நீக்கப்பட்டு இருக்கிறது.