பாட்டல் ராதா திரைப்பட நிகழ்வில் பங்கேற்று பேசிய இயக்குநர் மிஷ்கின், நாகரீகமற்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவையும் ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கடுமையாக எழுந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் தான் பேசியதற்கு மற்றொரு திரைப்பட நிகழ்வில் பங்கேற்றபோது மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், மிஸ்கின் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் விஷால் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் நடிகர் விஷால், இளையராஜா கடவுளின் குழந்தை, அவரை மரியாதைக்குறைவாக பேச யாருக்கும் எந்த அதிகாரமும், அருகதையும் கிடையாது என்று கண்டனம் தெரிவித்தார்.
மிஸ்கின் பேசியது குறித்து விஷால் பேசுகையில், “அசிங்கமாக பேசிவிட்டு பின்பு மன்னிப்பு கேட்பதே அவருக்கு வேலையா போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, அதைத்தாண்டி கெட்டவார்த்தை பேசுவது தவறானது. அதையெல்லாம் தாண்டி பேசினால், அது அவருடைய பிரச்னை. ஆனால் இளையாராஜா சாரை ஒருமையில் பேசவோ, மரியாதைக்குறைவாக பேசவோ யாருக்கும் எந்தவித அதிகாரமும், அருகதையும் கிடையாது.
இளையராஜா கடவுளின் குழந்தை, அவரின் பாடல்களின் மூலமாக நிறைய பேர் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்திருக்காங்க, மிகுந்த மகிழ்ச்சியையும் அடைஞ்சிருக்காங்க. அவருடைய பாட்டு ஒவ்வொருவரின் ரத்தத்திலும் இருக்கு, இதுவரை மணிரத்னம் முதலிய எத்தனையோ இயக்குநர்களை ஆரம்பத்தில் ஏற்றிவிட்டிருக்காரு. அப்படிப்பட்ட மனிதரை மரியாதைக்குறைவாக பேசுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் கெட்டவார்த்தை பேசும்போது கைத்தட்டுகள் வந்ததை பார்க்க வருத்தமாக இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.