ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ ஸ்பை த்ரில்லர் உலகளவில் 1300 கோடி வசூலித்த வெற்றிக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியான ‘துரந்தர் தி ரிவென்ஜ்’ மார்ச் 19 வெளியான ஒரே வாரத்தில் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் குறித்து கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டுக்களை பொழிந்துள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் இந்திய ஏஜெண்ட் என்ற கதையை மையமாக வைத்து ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியாகி, ஒரே வாரத்தில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 172 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது துரந்தர் தி ரிவெஞ்ச்.
இப்படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்துவரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
துரந்தர் தி ரிவென்ஜ் படம் பார்த்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் விராட் கோலி, “இன்று படம் பார்த்தேன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இது போன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று கூறுவேன். எல்லா விதமான உணர்வுகளையும் வெளிக்கொண்டுவந்தது, கிட்டத்தட்ட 4 மணி நேரம் நான் ஒருமுறை கூட அசையவில்லை. ஆதித்யா தர் உங்கள் திறமையும், உறுதியும் நீங்கள் உருவாக்கியதில் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் ஒரு மேதை.
மேலும், எல்லா நடிகர்களும் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரன்வீர் சிங் நீங்கள் இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு புதிய உயரத்தை அடைந்துவிட்டீர்கள், உங்கள் நடிப்பு அற்புதத்திற்கும் அப்பாற்பட்டது. முற்றிலும் பிரமாதம்” என பதிவிட்டுள்ளார்.
விராட் கோலிக்கு நன்றி தெரிவித்திருக்கும் இயக்குநர் ஆதித்யா தர், ”வாவ்! விராட், இது நடக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை, இது உண்மையிலேயே எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. நீங்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் பங்கேற்ற காலத்திலிருந்தே நான் உங்கள் ரசிகன். ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வரும் ஒரு ஜாம்பவான் இப்படி அன்பை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது ஒரு தனி உணர்வைத் தருகிறது. நீங்கள் ஒவ்வொரு முறையும் வெளியே வரும்போது நாட்டைத் தாங்கிச் செல்லும் விதம் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. எங்களால் முடிந்த சிறிய வழியில், திரைப்படங்கள் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சிப்போம். ஜெய் ஹிந்த்” என நன்றி தெரிவித்துள்ளார்.