கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் web
சினிமா

ஆக.22ல் ரீ ரிலீஸ் | 34 ஆண்டுக்கு பிறகும் குறையாத மாஸ்.. கவனம் ஈர்த்த ’கேப்டன் பிரபாகரன்’ ட்ரெய்லர்!

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் ட்ரைலர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

PT WEB

விஜயகாந்தின் மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன், 4கே தரத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதையொட்டி அப்படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

34 ஆண்டுக்கு பிறகு ரீரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன்..

விஜயகாந்தின் 100ஆவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் 1991ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. ரஜினி, கமல் உள்பட பல நடிகர்களுக்கு 100ஆவது படம் தோல்விப் படமாகவே அமைந்தது. விஜய்காந்துக்கோ அவரது கேரியரின் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்றாக கேப்டன் பிரபாகரன் அமைந்தது. திரையரங்குகளில் 300 நாட்கள் ஓடியது இப்படம்.

கேப்டன் பிரபாகரன்

படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்தின் நெருக்கமான நண்பர். விஜயகாந்த் கலையுலக வாழ்வில் பெரும் இடத்துக்கு வந்ததில் உற்ற துணையாக இருந்தவர். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991இல் இப்படம் வெளியானபோது, ஆங்கில படங்களுக்கு இணையான முயற்சியாக தமிழில் பேசப்பட்டது. திரைப்பட கல்லூரியில் பயின்று, அத்துறைக்கு வந்த இளைஞர்கள், புதியவர்கள் பலரை விஜயகாந்த் அந்நாட்களில் ஆதரித்தார். அந்தப் படங்களின் தொடர்ச்சியாகவே இது அமைந்தது. படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினி, கமல், விஜயகாந்த் எனும் கதாநாயக வரிசையைத் தமிழ் சினிமாவில் உருவாக்கியது. படத்தில் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அந்நாட்களில், வில்லனாக நடித்த மன்சூர் அலி கான் பேசப்பட்டார்.

கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன் படம் வெளியான அதே நாளில் வெளியான இன்னொரு படம் சின்னதம்பி. இரு படங்களுமே வெற்றிக் கொடி நாட்டின என்றாலும், சின்னதம்பியில் பல பாடல்கள் அப்படத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது.... இசைக்காக கொண்டாட்டப்பட்டது சின்னதம்பி படம். கேப்டன் பிரபாகரன் படத்திலோ இரண்டே பாடல்கள். ஆனால், சின்னதம்பிக்கு பாடல்களுக்கு இணையாக இவையும் பேசப்பட்டன. குறிப்பாக ஆட்டமா தேரோட்டமா பாடலில் ரம்யா கிருஷ்ணனின் நடனம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. சின்னத்தம்பி, கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களுக்குமே இளையராஜா தான் இசையமைத்திருந்தார். கேப்டன் பிரபாகரனில் பின்னணி இசையில் இளையராஜா மிரட்டி இருப்பார். மலைகளின் பின்னணியில் வரும் காட்சிகள், மன்சூர் அலிகான் வரும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் பின்னணி பிம்மாண்டமாக இருக்கும்.

வரும் 22ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம், புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.