தமிழ் திரையுலகில் ஒரு நடிகருக்கு 100-வது படம் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமைந்ததெல்லாம் விஜயகாந்த் என்ற ஒருவருக்கு மட்டுமே இன்று வரை நடந்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு ஆர்கே செல்வணி இயக்கத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் 100-வது திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் விஜயகாந்த் உடன் சேர்ந்து சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர்.
இந்த படத்திலிருந்து தான் விஜயகாந்திற்கு ’கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. அதுவரை இப்படியான கதைக்களத்தில் ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை தமிழ்திரையுலகம் காணாமல் இருந்தது. இசைஞானி இளையாராஜா இசையில் பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா பாடல்கள் எல்லாம் அனைத்து திசையிலும் ஒலித்தன. இறுதிக்காட்சியில் விஜயகாந்த் பேசும் கோர்ட் வசனத்திற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இப்படி தமிழ் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிபடமான கேப்டன் பிரபாகரன் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கும் நிலையில், படத்தை புதிய பொலிவில் மீண்டும் ரிலீஸ் செய்யவிருப்பதாக இயக்குநர் செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படம், தமிழகமெங்கும் 500-க்கும் தியேட்டர்களில் 4k தரத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் செல்வணி, “தனக்கு காயம் ஏற்பட்டது தெரிந்தால் ஸ்டண்ட் மாஸ்டர், அப்படியான காட்சிகளை படமெடுக்க மாட்டார் என்பதால் என் தோளில் கைப்போட்டு எதார்த்தமாக பேசிக்கொண்டிருப்பது போல் நடித்தார். ஆனால் விஜயகாந்த் சாருக்கு சொல்லமுடியாத வலி இருந்தது. பின்னர் என்னையே உங்களுடைய ஷாட் முடிந்தது நீங்கள் போகலாம் சார் என்று சொல்லவைத்தார். தனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒரு படப்பிடிப்பு நடக்காமல் போகக்கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை காட்டினார். அதுபோல என்னால் 100 விசயங்களை சொல்ல முடியும்.
எந்தவசதியுமே இல்லாத காலக்கட்டத்தில் 300 அடி நீர்வீழ்ச்சியில் விஜயகாந்த் சாரே அதன்மேல் ஏறினார். அது முழுக்க முழுக்க வழுக்கும் பாறைகள், 300 அடி உயரம், நாங்கள் நீர்வீழ்ச்சியில் ஏறிமேலே சென்றபோது தண்ணீர் டேம் திறந்துவிட்டு விட்டார்கள். அந்த விபத்தில் நாங்கள் எல்லோரும் உயிர் தப்பியது பெரிய விசயம். கேமரா வைத்து படம்பிடித்த கிரேன் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அடித்துச்சென்றுவிட்டது. அவ்வளவு கடினப்பட்டு படம் எடுத்து பார்க்கும்போது, தற்போது தான் அந்தபடம் செய்தது போல இருக்கிறது.
அப்படியான படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்கிறோம் என்றபோது எல்லா விநியோகர்களும் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்க்காக கிட்டத்தட்ட 500 தியேட்டர்களை பிளாக் செய்துள்ளனர்” என்று பேசினார்.