Ranveer Singh, Dhurandhar 2 web
சினிமா

`துரந்தர் 2' படத்தை நிறுத்த வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு! என்ன காரணம்..?

இந்திய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்திய நபர்களை அழிப்பது தான் படத்தின் கதை. மேலும் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பு அறிவிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது.

Johnson

ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர் 2' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் சார்ந்த கருத்துகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின் வெளியிட அனுமதிக்கலாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 4 நாட்களில் இப்படத்தின் உலகளாவிய வசூல் 750 கோடி என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு நிறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Dhurandhar

இந்திய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்திய நபர்களை அழிப்பது தான் படத்தின் கதை. அதில் நிஜ சம்பவங்கள் பலவும் புனைவு கலந்து திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பு அறிவிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஷிலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் வெளியாகிவிட்டது, மனுவாக தாக்கல் செய்து விட்டு முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.