movie names x page
சினிமா

Top 10 சினிமா செய்திகள்| ரஜினியின் ‘தளபதி’ ரீரிலீஸ்.. டிரெண்டிங்கில் 2வது இடத்தில் ’லக்கி பாஸ்கர்’!

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. 6 நாட்களில் ஆயிரம் கோடியைத் ’தாண்டிய புஷ்பா 2’

அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கில் உருவான ’புஷ்பா 2’ படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், 6 நாட்கள் வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், ’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் ரூ.1,002 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும், ’ஆயிரம் கோடி அதிவேகமாக ஈட்டிய முதல் இந்திய திரைப்படம்’ என்ற சாதனையை படைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

2. பாலையாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர், தற்போது 'அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

3. 'வீரதீர சூரன் - பார்ட் 2’ யூடியூப்பில் சாதனை

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரதீர சூரன் - பார்ட் 2' எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. அதாவது இப்படத்தின் டீசர் வெளியான 48 மணி நேரத்தில் யூடியூப்பில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது.

4. நாளை, ரஜினியின் ‘தளபதி’ ரீரிலீஸ்

தமிழ் சினிமாவில் ’சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது அவரது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 'தளபதி' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் மகத்தான வெற்றிபெற்றது. மேலும், நாளை ரஜினி நடிப்பில் அடுத்து வரவுள்ள 'ஜெயிலர் 2', ‘கூலி’ ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன.

5. புதுச்சேரி அரசின் விருதைப் பெற்ற ஜோதிகா படம்

நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த படம் 'காதல் - தி கோர்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், 2023ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதை டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்தின் இயக்குநர் ஜியோ பேபிக்கு வழங்க உள்ளார்.

6. ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த நிலையில், இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

7. விமல் நடித்த ‘சார்’ படம் ஓடிடியில் வெளியீடு

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் ’சார்’. இந்த நிலையில், ’சார்’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

8. டிரெண்டிங்கில் முதல் இடத்தில் ’லக்கி பாஸ்கர்’

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘லக்கி பாஸ்கர்’. இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. உலக அளவில் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

9. உத்தரவாதம் அளித்த நடிகர் சிங்கமுத்து

”நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் நடிகர் வடிவேலு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில்தான், சிங்கமுத்து அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

10. திருப்பதியில் படப்படிப்பு: விசாரணையில் கோயில் நிர்வாகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், தெலுங்கில் வெளியான ‘35 சின்ன கத காடு’ என்ற படத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கோயிலைச் சுற்றி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதனை படம்பிடிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, திருப்பதி கோயில் தேவஸ்தானத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.