ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
தனுஷின் 55ஆவது படத்தை 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
நடிகர் ஜீவா அடுத்து பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த படம் 2025 ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய அப்டேட்டை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கிறிஸ்துமஸ் பரிசாக இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான படம், ’தென்மேற்கு பருவக்காற்று’. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படம் தற்போது வரை விஜய் சேதுபதியின் கேரியரில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. தற்போது, இந்தப் படம் இந்தியில் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு 'பேபி ஜான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய், ’பேபி ஜான்’ படக்குழுவினரை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ”படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப், அடுத்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் படம் 'மேக்ஸ்'. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஹாட்டு மாமா' வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை தயாரிப்பாளர் எஸ். தாணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தளபதி 69' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகின்ற புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் தலைப்பும் வெளிவர வாய்ப்பு உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இதில் ஜோடியாக நடித்துள்ளார். 'திரு.மாணிக்கம்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 'திரு.மாணிக்கம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது.
நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள ‘ரேகசித்திரம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர். ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ள இந்த படம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அனஸ்வர ராஜன், மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ், பாமா அருண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆசிப் அலி நடித்த வெளியான ’கிஷ்கிந்தா காண்டம்’ படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய படத்திற்கு ’THE ODYSSEY’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவிஞர் ஹோமரின் கவிதையை தழுவி இந்த படம் உருவாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படம் ஐமேக்ஸின் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நோலன் எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் டாம் ஹோலண்ட் மற்றும் மட் டெமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படம் 2026ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.