Mammootty Patriot
சினிமா

”பார்வையாளர்கள் இப்போது மேம்பட்டிருக்கிறார்கள்!” - மம்மூட்டி | Mammootty | Patriot

ஒவ்வொரு ஷாட் நடிக்கும் முன்பும் ஒரு டென்சன் இருக்கும். ரத்தம் கொதித்து ஏறும். எனவே நடிக்கத் துவங்கியதும் முதலில் அந்த டென்ஷனை மறைக்க வேண்டும். அதன்பின்பே நாம் அந்த கதாபாத்திரமாக மாறுவோம்.

Johnson

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மோகன்லால் - மம்மூட்டி. இருவரும் இப்போது பெரிய நட்சத்திரங்களாக தனித்தனியாக பல படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப கால கட்டடங்களில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சில வருடங்களாக இணைந்து நடிக்காமலிருந்த இந்த இருவரும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் `Patriot' படம் மூலம் ஒன்றாக திரையில் தோன்ற உள்ளனர். இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் சார்ந்த பேட்டியை அளித்து வருகிறது படக்குழு.

Mammootty

இதுதொடர்பாக நடிகர் மம்மூட்டி அளித்த பேட்டியில், ’சினிமாவில் நடிப்பது என்பது எப்போதும் உங்களுக்கு சோர்வளித்தது இல்லையா’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்னவர், "எப்போதும் செய்யக்கூடிய வேலை அல்ல இது. ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆள், ஒவ்வோர் இடம், அம்மா, அப்பா வேறு, நண்பர்கள் வேறு. குறைந்தது இரண்டு மாதத்திற்கு வேறு ஆட்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், விதவிதமான வாழ்க்கை. ஒரே கம்ப்யூட்டர், ஒரே மேசை, ஒரே ஃபைல் அல்ல. அலுவலக வேலை என்றால் மாதக் கணக்கில் அந்த ஃபைல் அப்படியே இருக்கும். இது அப்படி அல்ல. எல்லா நாளும் புதிய ஒரு நாள். புதிய விஷயம் செய்வோம்.

ஒரே கதாபாத்திரம், உடன் நடிக்கும் நடிகர்கள் ஒரே ஆட்கள், கதை ஒரே கதை என்றாலும்கூட நம்முடைய நடிப்பு ஒரு புதிய நாளில் புதிய நடிப்பாகும். நேற்று ஒரு மாதிரியும், இன்று வேறு மாதிரியும் எல்லாம் மாறும். எல்லா நாளும் புதியதுதான். ஒவ்வொரு ஷாட் நடிக்கும் முன்பும் ஒரு டென்சன் இருக்கும். ரத்தம் கொதித்து ஏறும். எனவே, நடிக்க துவங்கியதும் முதலில் அந்த டென்ஷனை மறைக்க வேண்டும். அதன்பின்பே, நாம் அந்த கதாபாத்திரமாக மாறுவோம். இந்த ரத்தக் கொதிப்புக்கும், கதாபாத்திரமாக மாறுவதற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சிறந்த நடிப்பு உருவாகும். நாம் சாதாரணமாகப் பேசும்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் பேசுவோம். ஆனால், கேமரா முன்னால் லைட்டும், அத்தனை ஆட்களும் இருப்பார்கள், ஒருவர் தவறு செய்தாலும் குழப்பம் ஏற்படும் என்பதை எல்லாம் மறந்து நடிக்க வேண்டும்" என்றார்.

மம்மூட்டி

மேலும், சமீப காலமாக மம்மூட்டி `Puzhu', `Kaathal – The Core', `Bramayugam', `Kalamkaval' என தைரியமாக பல கதைக்களங்களை தேர்வு செய்வது நடிக்கிறார். இதைக் குறிப்பிட்டு, ’எப்படி கதை தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டதும், "இப்போது நான் வெவ்வேறு வகையான பாத்திரங்களை நடிக்கக் காரணம், இது என் நெடுநாள் ஆசை. அப்போதும் நான் நிறைய விஷயங்கள் செய்தேன் என்றாலும், அதிகம் பரிட்சார்த்த முயற்சிகளை மறுத்தேன். படம் ஓடவேண்டும், கோடிக்கணக்கான வியாபாரம் அடங்கி இருந்தது. ஆனால், இப்போதைய காலகட்டத்தில் பார்வையாளர்கள் இன்னும் மேம்பட்டிருக்கிறார்கள். எனவே இப்போது நல்லதாக எந்தப் படம் கொடுத்தாலும் அவர்கள் ஆதரிக்கிறார்கள். அந்த ஒரு தைரியம்தான். மேலும், அப்படியான படங்களுக்கு எல்லாம் தயாரிப்பாளர் நான்தான்" என்றார் மம்மூட்டி.