செய்தியாளர்: ஜனவாஹன்
கர்நாடக இசை பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை மியூஸிக் அகாடமியில்கிறிஸ்துமஸ் நாளன்று நடைபெற்ற டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி அவருடைய வாழ்க்கையில் மட்டும் அல்லாது, கர்நாடக இசை வரலாற்றிலும் முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது.
கடந்த பத்தாண்டுகளாகவே டி.எம். கிருஷ்ணா தொடர்ந்து பல தாக்குதல்களைச் சந்தித்துவந்தார். இதற்கு முக்கியமான காரணமாக, ‘கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்த வேண்டும்; பிராமணமயமாக்கப்பட்டுவிட்ட கர்நாடக இசையை எல்லோருக்குமானதாக உருமாற்ற சீர்திருத்தங்கள் வேண்டும்’ என்று அவர் பேசிய தொடர் பேச்சுகளும், செயல்பாடுகளும்கூட அமைந்திருந்தது. ஒருகட்டத்தில், “கலைப் பன்மைத்துவத்துக்கு எதிராகச் சூழல் இருப்பதாகக் கூறி இனி மார்கழி சீஸன் கச்சேரிகளில் பங்கேற்க மாட்டேன்” என்றே கிருஷ்ணா அறிவித்தார்.
இதற்குப் பின் குப்பங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று வெகுஜன மக்கள் மத்தியில் கச்சேரிகள் பாடுவது, சாதியத்துக்கு எதிராக முழங்குவது என்று அவர் தொடர்ந்த நடவடிக்கைகள் மேலும் சர்ச்சைகள் உண்டாக்கின. கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியை பிராமணியம் விழுங்கிவிட்டது என்று பொருள்பட அவர் எழுதிய கட்டுரை இதன் உச்சமாக அமைந்தது. சமீபத்தில்கூட ‘எம்.எஸ். சுப்புலட்சுமி விருது’ அவருக்கு அறிவிக்கப்பட்டது, பெரும் சர்ச்சைக்கும் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணைக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில் தன் முடிவை மாற்றிக்கொண்டு, பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மார்கழி கச்சேரிகளில் பங்கேற்பேன் என்று கிருஷ்ணா சமீபத்தில் அறிவித்தார். “கிருஷ்ணாவின் நடவடிக்கைகளால் கர்நாடக இசை ரசிகர்கள் அவரை வெறுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை கர்நாடக இசை ரசிகர்கள் புறக்கணிப்பாளர்கள்” என்ற பேச்சு இதையொட்டி எழுந்தது. இசைக் கலைஞர்கள் சிலர் கிருஷ்ணா மீது முன்வைத்த விமர்சனங்களும்கூட சமூக வலைதளங்களில் வைரல் ஆயின.
இத்தகு சூழலில் மியூஸிக் அகாடமியின் 98ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி கிறிஸ்துமஸ் நாளன்று (நேற்று) நடைபெற்றது. கிருஷ்ணா எதிர்ப்பாளர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கினர் கர்நாடக இசை ரசிகர்கள். மியூஸிக் அகாடமியில் முழு இருக்கைகளும் நிறைந்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கத்துக்கு வெளியே நின்றிருந்தனர்.
எல்லா மரபுகளையும் தூக்கிப் போட்டு உடைக்கும் வகையில் லுங்கி – பீச் சர்ட் சகிதம் சபாவுக்குள் நுழைந்த கிருஷ்ணா கச்சேரியை தனது கருத்துகளைப் பரப்பும் ஜனநாயகக் களமாகவும் மாற்றிக்கொண்டார். “ராமரோ, கிறிஸ்துவோ, அல்லாவோ… எல்லா இறையருளும் ஒன்றுதான்” என்றும் “எல்லா மனிதரும் ஒன்றுதான்” என்றும் பொருள்படும் பாடல்களைப் பாடிய கிருஷ்ணா, கச்சேரியின் உச்ச பாடலாக அமைந்தது, எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய “சுதந்திரம் வேண்டும்” பாடல்.
முழுக் கச்சேரியையும் தன்னுடைய இசை மேதைமையால் நிறைத்த கிருஷ்ணா கூடவே ஜனநாயகத்துக்கான தன் தேட்டத்தையும் வெளிப்படுத்தியதற்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் அகாடமி நிர்வாகி என்.ரவி அவரை வாரி அணைத்துக்கொண்டதும், ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று பல நிமிடங்களுக்கு கை தட்டியதும் சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் ஓர் அற்புத கலைஞருக்கான மகத்தான மரியாதையாக அமைந்தன.
இது வரலாறு என்றார்கள் ரசிகர்கள். உண்மைதான்… இது வரலாறுதான்!