சமீப காலமாக பாலிவுட் படங்கள் ஏதும் பெரிய வெற்றி அடைவதில்லை. பெரிய ஹீரோ படங்கள் தொடர் தோல்வியே தழுவின என்ற பேச்சுக்கள் எழுந்தன. அவற்றை எல்லாம் வாயடைக்க செய்திருக்கிறது `சையாரா'.
ரொமாண்டிக் மியூசிகல் படங்களுக்கு பெயர் போன பாலிவுட் இயக்குநர் மோஹித் சூரி. `Zeher', `Kalyug', `Raaz' போன்ற படங்களை இயக்கியவர். பளிச் என சொல்வதென்றால் 2013ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற `Aashiqui 2' படம் இவர் இயக்கியதுதான். ஹாலிவுட்டில் வெளியான A Star is Born படத்தின் ரீமேக்தான் என்றாலும், படமும், பாடல்களும் அதிரிபுதிரி ஹிட். இன்றளவும் இப்படம் கல்ட் க்ளாஸிக்காக கொண்டாடப்படுகிறது.
அதன் பின் இவர் இயக்கிய படங்கள் ஓரளவு ஹிட் என்றாலும் `Aashiqui 2' வெற்றியை அவராலே முறியடிக்க முடியவில்லை. 2022ல் இவர் இயக்கத்தில் வெளியான `Ek Villain Returns' மிகப்பெரிய தோல்வியாகவும் அமைந்தது. எனவே கொஞ்சம் பிரேக் எடுத்து, இப்போது இயக்கி வெளியிட்டிருக்கும் படம்தான் `Saiyaara'.
`Aashiqui 2' படத்தை மோஹித் சூரி இயக்கிய போது, அதில் நடித்த ஆதித்யா ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் இருவரும் சில படங்களில் குட்டி குட்டி ரோலில் நடித்திருந்தவர்கள், கிட்டத்தட்ட புதுமுகங்கள். படத்தில் தெரிந்த நபர் இயக்குநர் மட்டும்தான். ஆனாலும் படத்தின் கதைக்களமும், இவர்களது நடிப்பும், இசையும் அத்தனை பேரையும் கவர்ந்தது. `Aashiqui 2'ல் நடந்தது போன்ற மேஜிக் `Saiyaara'விலும் நிகழ்ந்திருக்கிறது.
முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் அஹான் பாண்டே, அனீத் பட்டா இப்படத்தில் தான் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். படத்திருக்கும் மற்ற நடிகர்களும் பெரிய நட்சத்திரங்கள் கிடையாது. அப்படி ஒரு படத்திற்கு, திறக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும், ஹவுஸ்ஃபுல்.
இந்தியாவில் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 20 கோடி. புதுமுகங்கள் நடித்து வெளியான ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதன் முறை. 2025ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திப் பட வரிசையில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது `Saiyaara'. முதல் இடத்தில் விக்கி கௌஷலின் Chhaava 31 கோடி, இரண்டாம் இடத்தில் சல்மான்கானின் சிக்கந்தர் 28 கோடி, மூன்றாம் இடத்தில் அக்ஷயகுமாரின் ஹவுஸ்ஃபுல் 5, 24 கோடி. இந்த மாதிரி ஒரு ஹிட்டை சமீபத்தில் பாலிவுட் பார்த்ததில்லை. புதுமுகங்கள் மட்டுமே நடித்து வெளியான ஒரு படம் சூப்பர்ஸ்டார் படங்கள் அளவுக்கு வசூல் செய்வதுதான் இப்போது இந்திய சினிமாவின் ஆச்சர்யத்துக்கு காரணம்.
படத்தின் உருவாக்கம், விளம்பரம் சேர்த்து 60 கோடி செலவு செய்திருக்கிறது யாஷ் ராஜ் நிறுவனம். ஆனால் வெளியீட்டுக்கு முன்பே 45 கோடிக்கு வியாபாரங்கள் முடிந்துவிட்டது. இந்த சூழலில் முதல் நாளிலேயே படத்தின் பட்ஜெட்டை கவர் செய்துவிட்டது.
இந்த வார இறுதிக்குள் 70 - 80 கோடி வசூல் உறுதி என்கிறார்கள். எனவே படத்தின் வசூல் இந்த வேகத்தில் தொடர்ந்தால் மாபெரும் ஹிட் உறுதி என சொல்கிறது பாலிவுட் வட்டாரம்.