The Odyssey X
சினிமா

இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை அள்ளிய ’தி ஒடிசி’.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்பட வசூல் இந்தியாவில் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.

Premkumar S

ஹோமர் எழுதிய ’ஒடிசி’ என்னும் கிரேக்க காப்பியத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் திரைப்படம் தி ஒடிசி. ட்ராய் நகரை வீழ்த்திய பிறகு, வீடு திரும்பும் இதாக்கா அரசர் ஒடிசியஸ், பயணத்தின் வழியில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகியிருந்தது.

தி ஒடிஸி

கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தை ஐ மேக்ஸ் 70mm கேமராவில் எடுத்திருந்தார். எனினும், இத்தகைய திரை அனுபவத்தைப் பெற உலகத்தில் 41 தியேட்டர்கள் மட்டுமே உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஒரு தியேட்டர் கூட இல்லை. எனினும், இத்திரைப்படத்தைக் காண இந்தியர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தசூழலில் தான், தி ஒடிசி வெளியாகி 1 வாரத்தைக் கடந்திருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது.

அதேபோல, இந்திய மதிப்பில் சுமார் 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது வரை உலகம் முழுவதிலும் இருந்து ரூ. 3,206 கோடி வசூலைக் கடந்திருக்கிறது.