லோகேஷ் கனகராஜ் vs ராஜமவுலி web
சினிமா

’கூலி’ எதிரொலி| ’ஒரே ஒரு ராஜமவுலி தான்..’ லோகேஷ் கனகராஜை விமர்சிக்கும் தெலுங்கு ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜை தமிழ்சினிமாவின் ராஜமவுலி என்றும், கூலி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கு ஆவ்ரேஜ் வரவேற்பு கிடைப்பதால் ஒரேயொரு ராஜமவுலி தான் என்று தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Rishan Vengai

மாநகரம், கைதி போன்ற சிறந்த திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து ’விக்ரம்’ என்ற மல்டி-ஸ்டாரர் படத்தை பிளாக்-பஸ்டர் திரைப்படமாக கொடுத்தார். அந்த வெற்றியுடன் சேர்ந்து LCU என்ற இண்டர் கனக்ஸன் திரைப்படங்களை உருவாக்கப்போவதாக லோகேஷ் அறிவிக்க, அவருடைய படங்கள் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்தன.

ஆனால் விஜயை வைத்து எடுக்கப்பட்ட ‘லியோ’ திரைப்படத்தில், படத்தின் இரண்டாம் பாதியில் கதையிலும், திரைக்கதையிலும் சொதப்பியிருந்த லோகேஷ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வதில் ஏமாற்றினார்.

கைதி

இந்த சூழலில் ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்தபோது, இந்தமுறை லோகேஷ் தன்னுடைய ரைட்டிங்கில் கம்பேக் கொடுப்பார், கூலி திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆயிரம்கோடி வசூல் என்ற பெஞ்ச்மார்க்கை செட் செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

அதற்கேற்றார்போல் ரஜினியுடன் 35 வருடங்களுக்கு பிறகு இணைந்த சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்ததால் படத்தின் மீதான நம்பிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. இந்த சூழலில் இந்தமுறை சம்பவம் உறுதி என லோகேஷ் கனகராஜ் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

விக்ரம் படம்

ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்தமுறையும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக கூலி திரைப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட ’இன்னொரு ராஜமவுலி’ என்ற டேக் லைனிற்காக லோகேஷ் கனகராஜை தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.

ஒரே ஒரு ராஜமவுலி தான்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் ’கூலி’ படம் நேற்று ஆகஸ்டு 14ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது.

ரஜினியின் கூலி திரைப்படம்

படத்திற்கு முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ், கூலி திரைப்படம் முதல் ஆயிரம் கோடி வசூல் செய்யப்போகும் தமிழ் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல லோகேஷ் கனகராஜை தமிழ்சினிமாவின் ராஜமவுலி என்று புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த், ராஜமவுலியின் திரைப்படங்களை போல லோகேஷின் அனைத்து திரைப்படங்களும் வெற்றிப்படங்கள் என்று குறிப்பிட்டார்.

லோகேஷ் கனகராஜ்

இந்த சூழலில் கூலி திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறிய நிலையில், டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்தது கூலி. இந்தவேகத்தில் சென்றால் ஆயிரம் கோடி வசூல் நிச்சயம் என்ற நம்பிக்கை அதிகரித்த நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது கூலி.

இதைப்பார்த்த தெலுங்கு ரசிகர்கள் ராஜமவுலி என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங்கில் வைத்துவருகின்றனர். பல ரசிகர்கள் ‘ஒரே ஒரு ராஜமவுலி தான் என்றும், அவருடைய மேக்கிங்கிற்கு யாரும் இணையில்லை’ எனவும் பதிவிட்டு லோகேஷ் கனகராஜை விமர்சித்தும் வருகின்றனர்.