Lakshmi Manchu எக்ஸ் தளம்
சினிமா

"இதை மகேஷ்பாபுவிடம் கேட்பீர்களா?" - ஆடை குறித்த கேள்வி... புகார் அளித்த லக்ஷ்மி மஞ்சு|Lakshmi Manchu

உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது லட்சுமி நீ உன் வாழ்க்கையை வாழ் என சொல்வது. ஆனால் நீங்கள் எனக்கு எல்லைகளை வகுக்கிறீர்கள்.

Johnson

பிரபல தெலுங்கு சினிமா நடிகை லட்சுமி மஞ்சு. அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகிய படம் `Daksha: The Deadly Conspiracy' இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளானது. அதுதொடர்பாக, Telangana Film Chamberல் புகார் அளித்துள்ளார் நடிகை லட்சுமி மஞ்சு.
அப்பேட்டியில் தொகுப்பாளர், "நீங்கள் ஒரு புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் முன்பு, அதன் விளைவுகள் குறித்துச் சிந்திப்பீர்களா?" எனக் கேட்டார். அதற்கு "நான் மும்பைக்கு செல்லும்முன்பு அதைப் பற்றி யோசித்தேன். இப்போது யோசிப்பதில்லை. மேலும் என் புகைப்படத்தைவிட, நான் பதிவிடும் கருத்துகளை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள்" என பதிலளித்தார்.

அடுத்த கேள்வியாக, "மும்பை கலாசாரம் உங்கள் உடை தேர்வில்கூட பிரதிபலிப்பதுபோல் உள்ளதே" எனக் கேட்க, "நான் என் உடல்பற்றியும், சிந்தனைகள் பற்றியும் சுதந்திரமாக உணர்கிறேன். அமெரிக்காவில் இருந்தவள் நான். அங்கு இதனைப் பற்றி எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். என் ஆடை சுதந்திரம் மற்றவர்களுக்கும் தைரியம் தரக் கூடியதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்" என பதிலளித்தார்.

இதற்குப் பின் கேட்ட கேள்விதான் சர்ச்சசைக்குக் காரணமாக அமைந்தது. "நீங்கள் இப்படி ஆடை அணிந்தால், மற்றவர்கள் அதை விமர்சிக்கவும், மற்ற பெண்கள் அப்படி உடை அணியவும் வாய்ப்பு இருக்கிறதே" என தொகுப்பாளர் கேட்க, "இதை நீங்கள் ஓர் ஆணிடம் கேட்பீர்களா? மகேஷ்பாபு உங்களுக்கு 50 வயது ஆகிவிட்டதே? ஏன் சட்டையை கழற்றி திரிகிறீர்கள் எனக் கேட்பீர்களா? ஒரு பெண்ணிடம் கேட்க மட்டும் எவ்வளவு தைரியம் உங்களுக்கு. நீங்கள் இப்படி கேட்கும் கேள்விகளால்தான் மக்களும் அப்படியான கேள்விகளை கேட்கிறார்கள். எனவே கூடுதல் பொறுப்போடு செயல்படுங்கள். உண்மையில். நீங்கள் செய்ய வேண்டியது, லட்சுமி நீ உன் வாழ்க்கையை வாழ் எனச் சொல்வது. ஆனால் நீங்கள் எனக்கு எல்லைகளை வகுக்கிறீர்கள்" என பதில் அளித்தார் லட்சுமி மஞ்சு.

பேட்டியில் அந்தக் குறிப்பிட்ட பகுதி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தற்போது Telangana Film Chamberக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார் லட்சுமி மஞ்சு. அதில், "நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, நான் தயாரித்தது மட்டுமல்லாமல், என் தந்தை, புகழ்பெற்ற மோகன் பாபு காருவுடன் நடிக்கும் பெருமையையும் பெற்ற ஒரு படத்தை விளம்பரப்படுத்தினேன். மரியாதை நிமித்தமாக, மூத்த பத்திரிகையாளர் மூர்த்தி காருவுக்கு அன்றைய முதல் நேர்காணல் வாய்ப்பை வழங்கினோம். துரதிர்ஷ்டவசமாக, அவர் என் வயது, என் உடல், என் உடைகள் போன்றவற்றை குறிவைத்து என்னைக் குறைத்து மதிப்பிடத் துவங்கினார். அவரது கேள்விகள் எனது வேலையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை; அவை இழிவுபடுத்தவும், குறைத்து மதிப்பிடவும் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்: பத்திரிகை மற்றும் உண்மையை வெளிக்கொணர தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இது மற்றொரு நபரின் கண்ணியத்தை விலையாகக் கொடுத்து ’வைரல்’ ஆக மாற்றும் அப்பட்டமான முயற்சி. அவர் இவ்வாறு நடந்துகொள்வது இது முதல்முறை அல்ல. அவரது தொடர்ச்சியான, இழிவான நடத்தைக்கு ஒரு தொழில்முறை சூழலில் இடமில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து முறையான எச்சரிக்கையை வெளியிட பத்திரிகையாளர் மன்றத்தை நான் வலியுறுத்துகிறேன்.

லக்ஷ்மி மஞ்சு

இந்தியா, பெண்களைச் சக்தியாக மதிக்கும் நாடு. ஆனால், நாம் தொழில்முறை சார்ந்த இடங்களில் காலடி எடுத்து வைக்கும்போது, சாதாரண பெண் வெறுப்பு, அவமானம் மற்றும் அவமரியாதைக்கு ஆளாக்கப்படுகிறோம். இது தொடர முடியாது. நான் எனக்காக மட்டுமல்ல, என்னைப் பார்க்கும் பல பெண்கள், இவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பதற்காக. நான் எப்போதும் கடுமையான கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், ஆய்வுகளுக்கும் தயாரான நபர். ஆனால் பத்திரிகை துறை என்ற முகமூடிக்குப் பின் இருக்கும் குரூரத் தன்மையை பொறுத்துக்கொள்ள மாட்டேன். மூர்த்தி அவர்களிடமிருந்து நான் பொது மன்னிப்பு எதிர்பார்க்கிறேன், மேலும், வேறு எந்தப் பெண்ணும் இதுபோன்ற தவறான நடத்தையைச் சந்திக்கக்கூடாது என்பதற்காக அவரது நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு நான் சபையைக் கேட்டுக்கொள்கிறேன்.
மரியாதை என்பது விருப்பம் சார்ந்ததல்ல, பொறுப்புடைமை என்பது சமரசமற்றது"
என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் லட்சுமி மஞ்சு.