பெரும்பாலான தெலுங்கு சினிமா டைரக்டர்கள் அப்படித்தான்: ஸ்ரீரெட்டி மீண்டும் பகீர்!
’பெரும்பாலான தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள்தான்’ என்று நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார், நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் சேகர் காமுலா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் டகுபதி, இயக்குனர்கள் கோனா வெங்கட், கொரட்டலா சிவா, நடிகை ஜீவிதா ஆகியோர் மீதும் பாலியல் புகார் கூறினார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு தடை விதித்தது. மத்திய மகளிர் ஆணையம் இந்தப் புகார் குறித்து தெலங்கானா அரசிடம் அறிக்கைக் கேட்டுள்ளது. பிரச்னை பெரிதானதை அடுத்து நடிகைக்கு விதித்த தடையை, நடிகர் சங்கம் விலக்கிக்கொண்டது.
இந்நிலையில் தெலுங்கு சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைப் பற்றி பேசுவதற்கான கருத்தரங்கு ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகைகள் ஸ்ரீரெட்டி, அபூர்வா, கல்வியாளர் சுஜாதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஸ்ரீரெட்டி, ’ பெரும்பாலான தெலுங்கு சினிமா இயக்குனர்கள், நடிகைகளை படுக்கை அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்தான். இதை பல்வேறு நடிகைகள் துணிந்து வெளியில் சொல்ல தயங்குகின்றனர். சொன்னால், அடுத்து வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள் என்கிற பயம்தான் காரணம். சம்பளத்தில் கூட செக்ஸிசம் நடக்கிறது. ஹீரோவுக்கு ரூ.10 கோடி கொடுத்தால் ஹீரோயினுக்கு ஒரு கோடி கூட கொடுப்பதில்லை’ என்றார்.
‘உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சொன்னால், அது பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று கூறுகிறார்கள். இதனால் அவர்களை எதிர்த்து போராடுவது எளிதான விஷயமில்லை. அதோடு, எந்த நடிகை புகார் சொல்கிறாரோ, அவரை திமிர் பிடித்தவள், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்புக் கொடுக்கமாட்டார் என்று வதந்தி பரப்பிவிடுகிறார்கள்’ என்று நடிகை அபூர்வா கூறினார்.