நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் ஒருவர் மரணமடைந்தார். அவருடைய மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
இந்நிலையில் தற்போது ராம் சரண் நடிப்பில் வெளிவந்த கேம் சேஞ்சர் படத்திற்கும் பிரீமியர் காட்சிகளும், டிக்கெட் உயர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து 4 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்காக பதியப்பட்ட நிலையில், மனுமீதான விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புஷ்பா 2 பீரிமியர் காட்சி கூட்ட நெரிசல் விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகித்தினர் மற்றும் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டனர். அல்லு அர்ஜுன் ஜாமீனில் வெளியேவந்துள்ளார்.
இந்நிலையில் மனுமீதான உத்தரவை பிறப்பித்த தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி, “16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும், இரவு 11 மணிக்கு பின்னதாகவும் திரைப்பட காட்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது” என்று மாநில அரசு மற்றும் தியேட்டர் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் புஷ்பா 2 பிரீமியர் ஷோவின் போது ஒரு பெண்ணின் மரணத்திற்கு வழிவகுத்தபோதிலும், அவரது இளம் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு டிக்கெட் உயர்வு மற்றும் கூடுதல் நிகழ்ச்சிகளை அனுமதித்ததற்காக மாநில அரசை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.