தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரட்டை வரி விதிப்புக்கு எதிரான திரையரங்குகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரையரங்கு உரிமையாளர்களோடு, அரசுத் தரப்பில் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். ஜிஎஸ்டி வரியுடன் சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சினிமா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சினிமா டிக்கெட் விலை 100 ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால், 28 சதவிகிதம் ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணம் 100 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 18 சதவிகித ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். இதுவரை 120 ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் 153 ரூபாய்க்கும், 100ரூபாய் டிக்கெட் 118 ரூபாய்க்கும் விற்கப்படும். 90 ரூபாய் டிக்கெட் 106 ரூபாய்க்கும், 50 ரூபாய் டிக்கெட் 59 ரூபாய்க்கும் விற்கப்படும். சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தால் டிக்கெட் தொகையுடன் கூடுதலாக 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.