முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி செளந்தர்ராஜன் வாழ்கை வரலாறு படமாக்கப்பட உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் படம் உருவாக்கம் குறித்து பேட்டியுள்ளார்.
முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி செளந்தர்ராஜன் கடந்த 2006 ஆம் ஆண்டு தோகாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சில்வர் பதக்கம் வென்றார். ஆனால் அதனைத்தொடர்ந்து நடந்த பாலினச் சோதனையில் அவர் தோல்வியுற்றதால், அந்தப் பதக்கம் திறம்ப பெறப்பட்டது. இந்நிலையில் சாந்தி செளந்தர்ராஜன் வாழ்கை வரலாறு தற்போது திரைப்பட வடிவம் பெற இருக்கிறது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்க இருக்கும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது படம் குறித்து இயக்குநர் ஜெயசீலன் தவப்புதல்வி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “ ஓடுதளத்தில் சில வினாடிகள் நிற்பதற்காக, விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்வின் 10 வருடங்களை செலவிடுகிறார்கள். பதக்கம் வாங்கினால் உங்களது வாழ்கை இன்னும் சிறப்பாகத்தான் அமைய வேண்டும். ஆனால் சாந்தி வாழ்கையில் அது தலைகீழாக மாறியுள்ளது. வெற்றியை சுவைத்த பின்னர் அவர் சந்தித்தப் போராட்டமே என்னை அவரது வாழ்கையை படமாக எடுக்கத் தூண்டியது. சாந்தியின் அனுமதியுடன் இந்தப்படம் எடுக்கப்படுகிறது. இதற்காக கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களாக ஆராய்ச்சி செய்தேன். இந்தப்படம் 1994, 2006, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களை கடந்து வருகிறது.” என்றார்
சாந்தியின் பாலின சோதனை சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது, “ இந்தப்படம் அந்த சர்ச்சையை அறிவியல்பூர்வமாக அணுகியுள்ளது. சாந்திக்கு ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் (ஏஐஎஸ்) என்ற மரபணு கோளாறு (androgen insensitivity syndrome) இருப்பதால், அவருக்கு இயல்பாகவே டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருக்கிறது.
இது மிகவும் இயற்கையான ஒன்று. இது ஏதும் மருந்துகள் உண்பதால் ஏற்படுதில்லை. உசைன் போல்டுக்கு இயல்பாகவே நுரையீரல் செயல்படும் திறன் அதிகம். அதன் காரணமாக அவரால் இயல்பாகவே நன்றாக ஓட இயலும். அதை ஏற்றுக்கொள்ளும் சமூகம் இதனை ஏற்க மறுக்கிறது அவருக்கு ஒரு நியாயம், சாந்திக்கு ஒரு நியாயமா? இந்தப் படம் வெளியான பின்னர் அவரது தடைக்கு நீதி கிடைக்கும். சாந்தி கதாபாத்திரத்துக்கு புதிய முக நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் அந்தப் பணி முடிவடைந்துவிடும். இந்தப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு இயக்குநராக பணியாற்றுகிறார். புதுக்கோட்டையைச் சேர்ந்த சாந்தியின் வாழ்கை வரலாறு படம், அவர் பயணம் செய்த உண்மையான பின்புலங்களில் படமாக்கப் பட உள்ளது.” என்றார்.