இளையராஜா, முக ஸ்டாலின் எக்ஸ் தளம்
சினிமா

இளையராஜாவிற்கு பாரத ரத்னா.. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

”இளையராஜா சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைக்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Prakash J

”இளையராஜா சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைக்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

சிம்பனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜா, இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில், ‘அமுதே தமிழே அழகிய மொழியே’ என்ற பாடலை, இளையராஜாவுடன் கமல்ஹாசனும் பாடினார். தொடர்ந்து பின்னணிப் பாடகர்கள், பல்வேறு பாடல்களைப் பாடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். மேலும், ‘பண்ணைபுரத்தில் உருவான இளையராஜா’ எனும் இசை ஊற்று, ’பார் போற்றும் சிம்பனி இசைத்தது வரை 50 ஆண்டுகால இசை வாழ்க்கை’ குறும்படமாக அரசு நடத்திய பாராட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”இது, இசைஞானி இளையராஜாவுக்கான பாராட்டு விழா மட்டுமல்ல; அவருக்கு நாமெல்லாம் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா. நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்திற்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு எல்லோரும் கூடியிருக்கிறோம். இளையராஜா கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். பாராட்டும், புகழும் இளையராஜாவுக்கு புதிதா?

ஸ்டாலின், இளையராஜா

நிச்சயமாகச் சொல்கிறேன் கிடையாது. அவரைப் பாராட்டுவதில் நாம்தான் பெருமையடைகிறோம். இன்னும் சொல்ல வேண்டுமெனில், நம் இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலமாகிவிட்டது. ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் உங்களின் ஒருவராக அவரை வாழ்த்துகிறேன். ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே கிடையாது. ராஜாவின் பாடலை தனது மனதில் ஏற்றி இன்ப, துன்பங்களுக்கு பொருத்திப் பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. தாய், தாலாட்டாக இருந்திருக்கிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல, இணையற்ற ராஜா. இத்தருணத்தில் இனி ஆண்டுதோறும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கிறேன். இளையராஜா சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைக்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” எனக் கோரிக்கை வைத்த முதல்வர், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.