Rajini, Kamal, Sundar C Thalaivar 173
கோலிவுட் செய்திகள்

அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில்.. ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்! பின்னணி என்ன?

சுந்தர் சி விலக என்ன காரணம் என்பதை தெளிவாக அவர் சொல்லவில்லை. ஆரம்பத்திலிருந்து ரஜினி படம் சார்ந்த பல மாற்றங்கள் நடந்தபடியே இருக்கின்றன.

Johnson

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவதாக நவம்பர் 5ம் தேதி அறிவித்தனர். அருணாச்சலம் படத்திற்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படம் பொங்கல் 2027க்கு வெளியீடு என அறிவித்தனர். ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் என சொல்லப்பட்டது. இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சியிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ரஜினி படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Sundar C

அந்த அறிவிப்பில் "எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், மதிப்புமிக்க #Thalaivar173யிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இடம்பெறும் இந்த முயற்சி, புகழ்பெற்ற உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில் இப்படம் தயாராவது எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் நிபுணத்துவம் மிக்க வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்ற குறிப்பை வெளியிட்டுள்ளார்.

சுந்தர் சி விலக என்ன காரணம் என்பதை தெளிவாக அவர் சொல்லவில்லை. ஆரம்பத்திலிருந்து ரஜினி படம் சார்ந்த பல மாற்றங்கள் நடந்தபடியே இருக்கின்றன. `ஜெயிலர் 2'வுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவான `கூலி' படம் வசூல் ரீதியில் லாபத்தை கொடுத்தாலும், எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் வந்தது. மேலும் லோகேஷ் கூறிய கதையிலும் ரஜினிக்கு உடன்பாடில்லை என சொல்லப்பட்டது.

இதன் பின்பு ஜெயிலர் 2வுக்கு அடுத்த படமாக நெல்சன் - ரஜினி ஒரு படம் செய்ய இருக்கிறார்கள் என தகவல்கள் வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், ரஜினி - சுந்தர் சி கூட்டணி அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தக் கூட்டணியும் உடைந்திருக்கிறது.

Lokesh, Nelson

சுந்தர் சி இப்போது `மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து விஷால் நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் நவம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்துதான் ரஜினி - சுந்தர் சி படம் அறிவிக்கப்பட்டது. விஷால் படத்தை முடித்துவிட்டு தான் ரஜினி படத்திற்கு சுந்தர் சி போவார் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால் ரஜினி படம் தான் முதலில் என அதில் சில குழப்பங்கள் நீடித்தது. விஷால் - சுந்தர் சி பட அறிவிப்பு வந்த உடனே அவசரமாக ரஜினி - சுந்தர் சி பட அறிவிப்பு வந்ததும். அறிவிப்பு வந்து ஒரு வாரத்தில் சுந்தர் சி படத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததும் எதேர்சையாக நடந்ததா என்பது கேள்வியாகவே இருக்கிறது.

சுந்தர் சி அடுத்து இயக்க இருந்த படம் காரணமா? இல்லை சுந்தர் சி சொன்ன கதையில் எதுவும் மாற்றுக் கருத்தா? என பல கோணங்களில் கேள்விகள் எழுகிறது. ஏனென்றால் ரஜினியுடன் `அருணாச்சலம்', கமலுடன் `அன்பே சிவம்' இருவருடனும் பணியாற்றியவர் சுந்தர் சி. அவர்களின் குட்புக்கில் எப்போதும் இருக்கும் அவர் படத்திலிருந்து விலகி இருப்பது கோலிவுட்டுக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.

இந்த சூழலில் ரஜினிக்கு முன்பு ஒருமுறை வெங்கட்பிரபு கதை கூறி உள்ளார் எனவும், அந்தப் படம் தலைவர் 173 படமாக உருவாக வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறாரா? அல்லது வேறு இயக்குநரா என்பது அறிவிப்பு வரும் போதே உறுதியாக தெரியும்.