‘கர’ படத்துக்கான பேட்டியில், தமிழ் படத்தில் கருப்பாக மேக்கப் போட்ட வெளிமொழி நடிகையை ஏன் நடிக்க வைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, விக்னேஷ் ராஜா பதில் அளித்தார்.
தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் தெடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அப்படியான பேட்டி ஒன்றில் தமிழ் படத்தில் தமிழ் பெண்ணை நடிக்க வைக்காமல், வெளியில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து, கருப்பாக மேக்கப் போட்டு நடிக்க வைப்பது ஏன்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன விக்னேஷ் ராஜா "ஒரு நடிகர்/நடிகை தேர்வு செய்வதில் இரண்டு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று அவரின் நடிப்பு திறமை, இரண்டாவது மார்க்கெட்டில் அவருக்கு இருக்கும் பிரபல்யம். இதில் எனக்கு மார்க்கெட் சார்ந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை. கன்டென்ட் தான் படத்தை ரீச் ஆக்கும். ஆனால் நடிப்பு பொறுத்தவரை நான் மிக உறுதியாக இருப்பேன். என்னுடைய கதாபாத்திற்கான நியாயம் செய்யும் நபரை தான் நான் தேர்வு செய்வேன். இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு 20 - 25 பேரை ஆடிஷன் செய்தோம். அதில் பிரபல நடிகைகள் முதல் புதுமுகங்கள் வரை பலரும் இருந்தனர்.
ஆனால் ஆடிஷனில் மமிதா செய்த நடிப்புக்கு நெருக்கமாக கூட வேறு யாரும் செய்யவில்லை. அவர் முழுக்க முழுக்க அவரின் திறமையினால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது தனுஷ் சாரிடம் நான் ஒரு கதை சொல்கிறேன். என்னைவிட வேறு யாராவது சிறப்பான கதையை சொன்னால் அவருடன் தானே தனுஷ் சார் படம் செய்வார். அது ஒரு தெலுங்கு இயக்குநர் என வைத்துக் கொள்வோம். உடனே தமிழில் இயக்குநர்கள் இல்லையா? ஏன் தெலுங்கு இயக்குநர் என கேட்போமா? எனவே இது ஒரு பொருளற்ற வாதம்." என்றார்.